இலங்கைத் தமிழ் அகதிகளை நியூசிலாந்து ஏற்காது என அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 12, 2011

நியூசிலாந்தை நோக்கிப் படகொன்றில் வந்த இலங்கை அகதிகளைத் தாம் ஏற்கப்போவதில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ அறிவித்துள்ளார்.


இலங்கைத் தமிழர்கள் 87 பேரை நியூசிலாந்து நோக்கி ஏற்றிச் சென்று கொண்டிருந்த எம்.வி.அலிசியா என்ற கப்பல் இந்தோனேசியத் துறைமுகத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில் ரியாவு தீவுகளில் இந்தோனேசியக் கடற்பரப்பில் நின்று கொண்டிருந்த போதே இந்தக் கப்பலை சனிக்கிழமை இந்தோனேசிய கடற்பரப்பு காவல் துறையினர் மற்றும் கடற்படையினர், டான் ஜுங் பினாங் என்ற துறைமுகத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இந்தோனேசிய கடற்படையினரால் பிடித்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், தம்மை நியுசிலாந்து அரசோ, ஐநா மன்றமோ பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளனர். "எமது எதிர்காலம் நியூசிலாந்திலேயே", "நியூசிலாந்துக்குச் செல்ல விரும்புகிறோம்" போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளுடன் அவர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.


விடுதலைப் புலிகளின் உறவினர்கள், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கப்பலில் இருப்பதாக கப்பலிலிருந்து செல்வக்குமார் என்பவர் தமிழோசைக்குத் தெரிவித்தார். கப்பலிலுள்ள பெரும்பாலானவர்கள் மலேசியாவிலிருந்தே, புறப்பட்டதாகவும், கப்பல் இந்தோனேசியாவிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டதென்றும் செல்வக்குமார் மேலும் கூறினார்.


ஆனாலும், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இவர்களின் கோரிக்கைக்கு இணங்க மறுத்துள்ளார். எமது முடிவு பேசி முடியத்தக்கதல்ல எனக் கூறினார்.


"இவர்களை நாம் ஏற்றுக் கொள்வதனால், மக்களைக் கடத்துவோருக்கு நாம் ஆதரவளிப்பதாக முடியும். அத்துடன், ஏனையோரின் உயிருக்கும் ஆபத்தானதாக இருக்கும்," என அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். படகில் வருபவர்கள் அனைவரும் உண்மையான அகதிகள் எனபதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.


நியூசிலாந்து ஆண்டுதோறும் 750 அகதிகளைப் பொறுப்பெடுக்கின்றது. ஆனாலும், சட்டவிரோதமாக நுழைபவர்களை நாம் பொறுப்பெடுக்க முடியாது என அவர் கூறினார்.


இந்த அறிவித்தல் மூலம் ஜோன் கீ அகதி அந்தஸ்து கோருவோரின் சட்டபூர்வப் பாதுகாப்பை நிராகரிப்பதாக பன்னாட்டு மன்னிப்பு ஆணையம் கூறியுள்ளது. "சர்வதேசச் சட்டத்தின் படி அகதிகள் தமக்குப் பாதுகாப்புக் கோருவதற்கு அவர்களுக்கு அதிகாரமுள்ளது," என அதன் தலைவர் பாட்ரிக் ஹோம்ஸ் கூறியுள்ளார்.


மூலம்[தொகு]