உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கைப் பிரச்சினை: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 16, 2013

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவரும் சூழ்நிலையில், அனைத்து கலை மற்றும் அறிவியல்துறை கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறையை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.


கல்லூரிகளின் 'மாணவர் தங்கும் விடுதி'களிலிருந்து மாணவர்களை வெள்ளிக்கிழமை மாலைக்குள் காலிசெய்துவிட்டு செல்ல உத்தரவிடுமாறு, கல்லூரி நிர்வாகங்களை 'கல்லூரிக் கல்வி இயக்குனரகம்' கேட்டுள்ளது. தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்த மாணவர் அமைப்புகள் திட்டமிட்டுவரும் சூழலில், மாநில அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக தமிழக செய்தி ஊடகங்கள் கருதுகின்றன.


தமிழக செய்தித் தொலைக்காட்சிகளுக்கு செவ்வி வழங்கிய மாணவர்கள், "விடுமுறை அறிவிப்பால் எங்களின் போராட்டங்களை அரசு தடுத்து நிறுத்திவிட முடியாது; பிற கல்லூரி மாணவர்களுடன் கைகோர்த்து, எங்களின் போராட்டங்களை வலுப்படுத்துவோம்" என்றனர். போராட்டங்கள் ஆரம்பித்த தருணத்தில் வேறுபட்டிருந்த கோரிக்கைகள், இப்போது ஒன்றுபட்டு அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பொதுவான கோரிக்கைகளை முன்வைப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அரசியல் கட்சி சார்பில்லாமல் போராடும் மாணவர்கள், பிற சமூக அமைப்புகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


தொடர்புள்ள செய்தி

[தொகு]

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், மார்ச் 14, 2013

மூலம்

[தொகு]