உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் புதிய கத்தோலிக்க மறைமாவட்டமாக மட்டக்களப்பு அறிவிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

ஞாயிறு, செப்டெம்பர் 23, 2012

கடந்த 119 ஆண்டுகளாக ஒரே மறைமாவட்டமாக இயங்கி வந்த திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் இரண்டும் பிரிக்கப்பட்டுத் தனி மறைமாவட்டங்களாயின. மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக மட்டக்களப்பு, திருமலை மறைமாவட்ட துணை ஆயராக இதுவரை பணியாற்றிவந்த அதிவண கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை இன்று பதவியேற்றார். திருகோணமலை மறைமாவட்ட ஆயராக கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தொடர்ந்து பதவியில் இருப்பார்.


மட்டக்களப்பு, புளியந்தீவு புனித மரியாள் இணைப்பேராலயம் மட்டக்களப்பு மறைமாவட்ட பேராலயமாகவும் அறிவிக்கப்பட்டது.


மட்டக்களப்பு மறைமாவட்டம் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களினால் இவ்வாண்டு சூலை 3 ஆம் நாள் அன்று இலங்கையின் புதிய மறைமாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.


இன்று மிகவும் பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அதிவண. கலாநிதி யோசப் ஸ்பிட்டேரி முன்னிலையில் யோசப் பொன்னையா ஆண்டகை ஆயராக பதவியேற்றார். இந்நிகழ்வில், இலங்கையின் ஏனைய 11 மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள், துறவியர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், காவல்துறை மற்றும் இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர்.


ஆரம்பகாலத்தில் இலங்கைக் கத்தோலிக்க திருச்சபை ஒரே மறைமாவட்டமாக இந்தியாவின் கொச்சின் மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் நிருவகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1845ல் கொழும்பு, யாழ்ப்பாணம் என இரு மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கிழக்கிலங்கைக் கத்தோலிக்க திருச்சபை யாழ்ப்பாண மறைவாட்ட நிர்வாகத்தின் கீழேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் கத்தோலிக்கரின் பரம்பல் காரணமாகவும் அவர்களது ஆன்மீகத் தேவையின் அதிகரிப்புக் காரணமாகவும் புதிய மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.


இலங்கைக் கத்தோலிக்க திருச்சபையில் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், காலி, திருகோணமலை-மட்டக்களப்பு, பதுளை, மன்னார், அநுராதபுரம், இரத்தினபுரி, சிலாபம் ஆகிய 11 மறைமாவட்டங்கள் இதுவரை இயங்கி வந்தன. இலங்கைக் கத்தோலிக்க திருச்சபை தற்போது 12 மறைமாவட்டங்களைக் கொண்டதாக விளங்குகின்றது.


மூலம்[தொகு]