இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கு அமைச்சர்கள் தெரிவு, தமிழர்கள் எவரும் இல்லை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், செப்டம்பர் 25, 2012

அண்மையில் நடந்து முடிந்த இலங்கையின் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்ததை அடுத்து அம்மாகாணசபைக்கான அமைச்சர்களின் விபரங்களை அரசு அறிவித்துள்ளது.


ஐந்து பேரடங்கிய அமைச்சரவைக்கு நான்கு முஸ்லிம்களும், ஒரு சிங்களவரும் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே முதலைமைச்சராக ஐமசுமு கட்சியைச் சேர்ந்த நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டிருந்தார். தமிழர் எவரும் இம்முறை இடம்பெறவில்லை.


மொத்தம் 37 உறுப்பினர்களைக் கொண்ட மாகாணசபைக்கு ஆளும் கூட்டணியில் இருந்து 15 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து 11 பேரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு சார்பில் 7 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 4 பேரும் தெரிவாயினர். எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முசுலிம் காங்கிரசின் ஆதரவுடன் ஆளும் கூட்டணி ஆட்சியமைத்தது.


இம்முறை அமைச்சரவையில், முதலமைச்சரை விட முசுலிம் காங்கிரசைச் சேர்ந்த இருவர் (எம். ஐ. எம். மன்சூர், செய்னுலாப்தீன் அகமட் நசீர்), தேசியக் காங்கிரசைச் சேர்ந்த ஒருவர் (எம். எஸ். உதுமான் லெப்பை), சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் (விமலவீர திசாநாயக்கா) இடம்பெற்றுள்ளனர். அவை முதல்வர், மற்றும் அவை துணை முதல்வர் பதவிகளும் சுதந்திரக் கட்சிக்கும், முசுலிம் காங்கிரசுக்கும் வழங்கப்பட்டுள்ளன.


ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு அமைச்சர் பதவி எதுவும் கிடைக்கவில்லை. அக்கட்சியில் இருந்து முன்னாள் முதலைமைச்சர் பிள்ளையான் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஏனைய அனைவரும் தோல்வியடைந்தனர். பிள்ளையான் மாகாண அமைச்சர் பதவி எதனையும் விரும்பவில்லை என முன்னர் அறிவித்திருந்தார். கடந்த மாகாணசபையில் இரு தமிழர்கள் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர். இம்முறை தமிழர்கள் எவருக்கும் மாகாண அரசில் இடம் கொடுக்காதது தமிழ்க் கூட்டமைப்புக்கு அரசியல் ஆதாயம் பெற்றுக் கொடுக்கும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg