உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியமைப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டெம்பர் 19, 2012

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் அப்துல் மஜீத் அரசுத்தலைவர் முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.


சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. "கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சுழற்சிமுறையில் வகிக்கப்படவுள்ளது. இதற்கமைய, இரண்டரை வருடங்களின் பின்னர் இப்பதவி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படும்," என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் அக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 ஆண்டு காலத்தில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை மஜீத் பெறுகின்றார். இவர் 11,726 விருப்பு வாக்குககளைப் பெற்று மாகாண சபைக்கு உறுப்பினராக தெரிவானார்.


செப்டம்பர் 8 ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் 37 உறுப்பினர்களைக் கொண்ட மாகாணசபைக்கு ஆட்சியமைக்க எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) 14 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான தேசிய விடுதலை முன்னணி 1 இடத்தையும் கைப்பற்றியது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 இடங்களைக் கைப்பற்றியது. முக்கிய எதிர்க் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 இடங்களையும் கைப்பற்றின.


கிழக்கு மாகானத்தில் வெற்றி பெற்ற ஏழு முஸ்லிம் உறுப்பினர்களில் நஜீப் ஏ. மஜீத்தும் ஒருவர். அதே வேளையில் ஐமசுகூ சார்பில் போட்டியிட்ட தமிழர்களில் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டுமே வெற்றி பெற்றார். ஏனைய அனைவரும் தோல்வியடைந்தனர்.


கடந்த சுமார் ஒரு வார காலமாக ஆளும் கூட்டணிக்கும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே நடந்த இழுபறியுடன் கூடிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது தேர்வு முடிவானது.


முஸ்லிம் காங்கிரஸ் 2012 ஏப்ரலில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. பின்னர் அது அக்கூட்டணியில் இருந்து விலகி ஆளும் கட்சிக் கூட்டணியில் இணைந்து கொண்டது.


இதற்கிடையில், "மக்கள் கொடுத்த ஆணையையும் முஸ்லிம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த விடயத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதறித் தள்ளியிருக்கிறது. இதன்மூலம் முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்," என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார். தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற கூட்டான தமிழ் பேசும் மக்களின் அதிகாரங்களுக்காக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் தமிழ்பேசும் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், அதனைக்கூட தட்டிக்யொதுக்கி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறார் ஹக்கீம்," எனக் கூறினார் இரா. சம்பந்தன்.


மூலம்[தொகு]