இலங்கையில் 'உதயன்' தமிழ்ப் பத்திரிகை மீது வன்தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

வியாழன், ஏப்பிரல் 4, 2013

யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் உதயன் தமிழ்ப் பத்திரிகை, இன்னொரு வன்தாக்குதலை சந்தித்துள்ளது. வட இலங்கை நகரான கிளிநொச்சியில் அமைந்துள்ள இப்பத்திரிகையின் கிளை அலுவலகத்தை ஆறுபேரை உள்ளடக்கிய கும்பலொன்று நேற்று அதிகாலை தாக்கியது. பணியகத்தின் முகாமையாளர் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். இவர்களில் இருவர் படுமோசமாகத் தாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அலுவலகத்திலிருந்த உடமைகள் பெருமளவில் சேதமடைந்தன.


பாரவூர்தி ஒன்றில் இருந்து அதிகாலை 05:00 மணிக்கு பத்திரிகைப் பிரதிகள் கீழிறக்கப்படும் போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாக கிளிநொச்சிக் காவல்துறையினர் தெரிவித்தனர். "தாக்குதலில் காயமடைந்த இருவர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்" எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


உதயன் கிளை அலுவலகம் கிளிநொச்சி காவல்நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. நகரில் அந்நேரம் பெருமளவு இராணுவத்தினர் பணியில் ஈடுபட்டிருந்ததாக உதயன் கிளிநொச்சிப் பணிமனையின் ஊழியர் சுகிர்தன் என்பவர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.


முகமூடி அணிந்த ஏழு பேர் துடுப்பாட்ட மட்டைகளுடன் வந்து தாக்குதலில் ஈடுபட்டதாக சுகிர்தன் கூறினார். அலுவலக உபகரணங்கள், கணினிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், பாரவூர்தி ஆகியன சேதமடைந்தன. அலுவலகப் பொறுப்பாளர் ஏ. பொன்ராசா, மற்றும் பார்த்திபன் ஆகியோர் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாயினர்.


எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணைகள் தொடருகின்றன என்றும் கிளிநொச்சிக் காவல்துறைப் பொறுப்பாளர் கபில ஜெயசேகர தெரிவித்தார்.


இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் மீது இவ்வாண்டு மட்டும் நான்காவது தடவையாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உதயன் பத்திரிகை அலுவலகங்கள் மீது பல தடவைகள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதயன் பத்திரிகை ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டில் உதயனின் மூத்த ஆசிரியர் குகநாதன் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்.


கடந்த சனிக்கிழமை அன்று, கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றின் மீது கற்கள் எறிந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எவரும் கைது செய்யப்படவில்லை.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]