உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடந்துள்ளன

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 27, 2014

இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புது தில்லியிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்துள்ளன. கருப்புக் கொடி ஏந்தி அணி செல்லுதல், தொடர்வண்டியை மறித்தல், சாலை மறியல், உருவபொம்மை எரிக்க முயலுதல், நீதிமன்றப் புறக்கணிப்பு என பலதரப்பட்ட போராட்டங்கள் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றதை அடுத்து, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கான தேதி குறிக்கப்பட்டது. இந்த விழாவினில் கலந்துகொள்ள இலங்கை உள்ளிட்ட சார்க் அமைப்பிலுள்ள அனைத்து நாட்டின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. முடிவில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில், மகிந்த ராசபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று புது தில்லியிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன.


புது தில்லி

கருப்புக் கொடி ஏந்தியவாறு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றபோது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அவரின் கட்சியினர் 187 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

சென்னை

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 100-க்கு மேற்பட்ட மதிமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையிலும் இப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

தொடர்வண்டி மறிப்புப் போராட்டங்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது. உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடந்தது.

அரியலூர்

தொடர்வண்டி மறிப்புப் போராட்டம் நடந்தது.

மணப்பாறை

உருவபொம்மை எரிப்புப் போராட்டத்தினை நடத்திய மதிமுக உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது.

முசிறி

உருவபொம்மை எரிப்புப் போராட்டத்தினை நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது.

இராமநாதபுரம்

தொடருந்து நிலையத்தில் இராமேஸ்வரம் - மதுரை பயணிகள் வண்டி மறிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

தொடருந்து மறியலில் ஈடுபட முயன்ற 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை

தொடருந்து மறியலில் ஈடுபட முயன்ற தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினைச் சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் கலை இலக்கியக் கழகம், உலக தமிழர் பேரமைப்பு, தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி இவற்றின் உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மூலம்

[தொகு]