ஈரான் அரசுத்தலைவர் தேர்தலில் சீர்திருத்த அணியைச் சேர்ந்த அசன் ரவ்கானி வெற்றி
- 18 பெப்பிரவரி 2018: இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது
- 7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 சனவரி 2016: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது
- 26 அக்டோபர் 2013: ஈரான் 'பழி வாங்கும் நடவடிக்கையாக' 16 போராளிகளைத் தூக்கிலிட்டது
ஞாயிறு, சூன் 16, 2013
ஈரானில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் சீர்திருத்த அணியைச் சேர்ந்த அசன் ரவ்கானி வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெறத் தேவையான 50% இற்கும் அதிகமான வாக்குகளை இவர் பெற்றுள்ளதால் இர்ண்டாம் கட்ட வாக்கெடுப்பை இவர் தவிர்த்துள்ளார்.
முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள் தலைநகர் தெகரான் வீதிகளில் இறங்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சீர்திருத்தத்திற்கு ஆதரவாக கோசங்களை அவர்கள் எழுப்பினர்.
தேர்தலில் வெளிப்படைத்தன்மை குறைவாக இருந்தமை, தணிக்கை போன்றவை குறித்து அமெரிக்கா கரிசனம் தெரிவித்திருந்தாலும், ஈரானிய மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறது. புதிய அரசுடன் தாம் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது. ஆனாலும், ஈரானின் அணுவாயுதத் திட்டங்கள் குறித்து எச்சரிக்கை தெரிவித்துள்ள இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு ஈரான் மீது மேற்கத்தைய நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரானின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி இரண்டு தடவைகள் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அரசுத்தலைவர் மகுமூத் அகமதிநெச்சாத் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ஈரானியர்கல் கடந்த வெள்ளியன்று வாக்களித்தனர். 50 மில்லியன் வாக்காளர்களில் 72.2% வீதமானோர் தேர்தலில் வாக்களித்தனர்.
64 வயதுடைய முன்னாள் மதத்தலைவரான ஹசன் ரௌஹானி, நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்து மக்களாட்சியைப் பலப்படுத்துவேன் என உறுதி பூண்டார். புதிய தலைவருக்கு நாட்டின் உயர் மதத்தலைவர் அயதொல்லா கொமெய்னி வாழ்த்துத் தெரிவித்தார்.
ஆகத்து மாதம் 3 ஆம் நாள் புதிய அரசுத்தலைவராக அசன் ரவ்கானி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்
[தொகு]- Iran election: President-elect Hassan Rouhani hails win, பிபிசி, ஜூன் 16, 2013
- Iranians revel as new president hails 'victory of moderation', ராய்ட்டர்ஸ், ஜூன் 16, 2013