உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரப் பிரதேசத்தில் மூன்று தொடருந்து விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 3, 2010

வட இந்தியா முழுவதும் சனிக்கிழமை காலை கடும் பனி மூட்டம் ஏற்பட்ட நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த மூன்று வெவ்வேறு தொடருந்து விபத்துக்களில் 10 பேர் கொல்லப்பட்டார்கள். 45 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.


கான்பூர் மாவட்டத்தில் உள்ள பங்கி ரயில் நிலையத்தில், சனிக்கிழமை காலை எட்டரை மணியளவில் பிரயாக்ராஜ் கடுகதி நின்றுகொண்டிருந்தது. அந்த நேரத்தில், பிவானி – கோரக்பூர் இடையே செல்லும் கோரக்தாம் கடுகதி, அதே பாதையில் வந்து, பிரயாக்ராஜ் கடுகதியின் பின்புறம் கடுமையாக மோதியது. மோதிய வேகத்தில, பிரயாக்ராஜ் கடுகதியின் இரண்டு பெட்டிகள் மிக மோசமாக சேதமடைந்தன.


இந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்பட பத்து பயணிகள் உயிரிழந்ததாக வடக்கு மத்திய ரயில்வேயின் அலகாபாத் மண்டல பொது மேலாளர் ஹரிஷ்சந்திர ஜோசி தெரிவித்தார். இந்த ரயிலின் "கார்டு' சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு ரயில்களும் தில்லியிலிருந்து வந்ததாகவும் அவர் கூறினார். பிரயாக்ராஜ் கடுகதியில் அலகாபாத்துக்கு பயணம் செய்த பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இந்த விபத்தில் காயமின்றி தப்பினார்.


சிதாம்ரி லிச்சாவி எக்ஸ்பிரஸ்-மகத் எக்ஸ்பிரஸ் மோதல்


மற்றொரு விபத்து சராய்போபட் பகுதியில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு நிகழ்ந்தது. இந்த விபத்தில் லிச்சாவி கடுகதி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.


கடும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்துகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.


சனிக்கிழமையன்று பனி மூட்டம் காரணமாக மட்டுமன்றி, வட இந்திய மின் தொகுப்பில் மின்சாரம் தடைபட்டதாலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மூலம்

[தொகு]