உள்ளடக்கத்துக்குச் செல்

உயிரை அழிக்கும் கொங்கோ காய்ச்சல் இந்தியாவில் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 20, 2011

மிகவும் அரிதான தொற்று நோய் ஒன்று முதற் தடவையாக இந்தியாவில் பரவியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கொங்கோ காய்ச்சல் எனப்படும் இந்த நோயினால் மூவர் இறந்துள்ளதாக நச்சுயிரியலுக்கான தேசியக் கல்விக்கழகம் (NIV) உறுதிப்படுத்தியுள்ளது.


1969 இல் கொங்கோ காய்ச்சலில் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்
நோயைப் பரப்பும் ஹையலோமா உண்ணி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மேற்கு அகமபாத் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமீனா பானு என்ற பெண் உயிரிழந்தார். இவருக்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவரும், தாதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தாதியின் இரத்தப் பரிசோதனையின் பின்பே கொங்கோ காய்ச்சல் வைரசு அவருக்குத் தொற்றியதாக மருத்துவர்கள் அறிந்தனர். இறந்த பெண்ணின் கணவரும், சகோதரரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இப்போது இந்நோய்க்காகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர்களின் நிலையில் முன்னேற்றம் உள்ளது என்றும் குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயநாராயண் வியாஸ் தெரிவித்தார்.


"கிரிமியன் - கொங்கோ இரத்தப்பெருக்குக் காய்ச்சல் (Crimean–Congo hemorrhagic fever) மிகவும் பயங்கரமான ஒரு வைரசு, ஆனாலும் எவரும் பீதி அடையத் தேவையில்லை," என அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 20க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள் கோலாட் கிராமத்தில் 5 கிமீ சுற்றுப்புறத்தில் பரிசோதனையில் ஈடுபட பணிக்கப்பட்டுள்ளனர்.


புதிதாக எவரும் இக்காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


கொங்கோ காய்ச்சல் உண்ணிகளால் பரப்பப்படும் ஒரு வைரசுக் காய்ச்சலாகும். இது வளர்ப்பு விலங்குகள், வனவிலங்குகள் மூலமாக மனிதரைப் பீடிக்கக் கூடியது. கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இந்நோய் பொதுவாகக் காணப்படுகிறது. மனிதரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோய் 30% உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது.


மூலம்

[தொகு]