உள்ளடக்கத்துக்குச் செல்

உலகக்கோப்பை 2010: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 17, 2010

சுவிட்சர்லாந்து அணி பலம்பொருந்திய ஸ்பெயின் அணியை அதிர்ச்சித் தோல்வியடைச் செய்து உலகக்கிண்ணப் போட்டித் தொடரின் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்து கொண்டுள்ளது.


தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற குழு எச் பிரிவுப் போட்டியொன்றில் சுவிட்சர்லாந்து அணி, ஸ்பெயின் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.


1954ம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுவிட்சர்லாந்து அணி உலகக் கிண்ண முதல் போட்டியில் வெற்றியீட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், உலக ஆடவர் தரப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் அணி, 24 ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்து நாட்டு அணியால் தோற்கடிக்கப்பட்டது.


இந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வாய்ப்பு ஸ்பெயின் அல்லது பிரேசிலுக்கு அதிகம் உள்ளது என்று பிரபல வீரர் பெலே கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


போட்டியின் 52ம் நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் கில்சன் பெர்னாண்டஸ் அபாரமான முறையில் கோல் ஒன்றைப் போட்டு சுவிட்சர்லாந்தின் வெற்றியை பதிவு செய்துள்ளார்.


இதே பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் சிலி நாட்டு அணி ஹொண்டுராஸ் நாட்டு அணியை 1-0 என்கிற கணக்கில் வென்றது.

மூலம்

[தொகு]