உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் தொடங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 24, 2010

தமிழ்நாடு அரசின் ஆதரவில் இடம் பெறும் முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நேற்று புதன்கிழமை கோயம்புத்தூரில் கோலாகலமாகத் தொடங்கியது.


இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் தலைமையில் இம்மாதம் 27 ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகின்றது.


முதல்வர் மு. கருணாநிதி தனனடது தலைமையுரையில், "ஒரு மொழியைச் செம்மொழியாகக் கூற, தேவைப்படும் 11 தகுதிகளை மட்டுமின்றி, அதற்கு மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழி, தமிழ் மொழி என்பதை தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். உலகின் முதலாவது தாய் மொழியாகத் தமிழ் மொழி அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.


இந்த மாநாட்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை பின்லாந்தைச் சேர்ந்த மொழியறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கினார். விருதினைப் பெற்றுக் கொண்ட அஸ்கோ பர்போலோ ஏற்புரை நிகழ்த்தினார்.


மாநாட்டில் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்துள்ள தமிழறிஞர்கள் பங்கு பெறுகிறார்கள். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் வா. செ. குழந்தைசாமி, அமெரிக்க நாட்டு பேராசிரியர் ஜார்ஜ் ஹாட், இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


கலைஞர் கருணாநிதி தமது ஆற்றலைப் பயன்படுத்தி மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

—பேராசிரியர் கா.சிவத்தம்பி

"கலைஞர் கருணாநிதி தமது ஆற்றலைப் பயன்படுத்தி மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு சாதாரண மாநாடல்ல. இது தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்கும் மிகப்பெரிய மாநாடாகவே நாம் காண்கின்றோம்," என வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவித்தார்.


உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்க எளிமையான புத்தகங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்கிற வேண்டுகோளை தமது வாழ்த்துரையின் போது பேராசிரியர் சிவத்தம்பி வெளியிட்டார். இதற்கான ஒரு அறிவிப்பு இந்த மாநாட்டில் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.


கோவையில் நடைபெற்று வரும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி வண்ணமிகு பேரணி ஒன்றும் இடம் பெற்றுள்ளது.


இந்த மாநாட்டையொட்டி கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மாநாட்டில் ஆங்கிலத்தில் உரையாற்றுபவர்களுக்கு மொழி பெயர்ப்பு வழங்கப்படும் என ஏற்பாட்டு குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அந்த ஒழுங்குகள் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்[தொகு]