உள்ளடக்கத்துக்குச் செல்

உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 16, 2010


உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித இடமான மக்கா நகரத்தில் கட்டப்படுகிறது. முஸ்லிம்களின் புனித இடமாக உள்ள மஸ்ஜித் ஹரம் சரீப் அருகில் 662 மீட்டர் (2717 அடி) உயரம் கொண்ட கட்டடம் அந்நாட்டு அரசால் கட்டப்பட்டு வருகிறது.


உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் கடந்த சனவரியில் திறக்கப்பட்டது. இதுவரை உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடமாக தைவானில் உள்ள தாய்பேயில் 101 மாடிகளைக் கொண்ட 508 மீட்டர்(1676 அடி) கொண்ட கட்டடமே கருதப்பட்டு வந்தது.


மக்கா அரசு கோபுரம் (Makkah Royal Tower) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோபுரத்தின் உச்சியில் ஆறு கோபுர கடிகாரங்கள் பொறுத்தப்பட இருக்கிறது. செர்மனியில் தயாராகும் அந்த கடிகாரங்கள் உலகின் மிகப்பெரியதாக இருக்கும். 45 மீட்டர் அதாவது 147 அடி அகலமும், 43 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த கடிகாரங்களை இரவில் 17 கி.மீ தூரம் வரையிலும், பகலில் 12 முதல் 13 கி.மீ தூரம் வரையில் பார்க்க முடியும்.


சவுதி அரசால் கட்டப்பட்டுவரும் இந்தப் பிரமாண்டமான கட்டடத்திற்கான செலவு மூன்று பில்லியன் டாலர்களாகும். புனித பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிக்கும் பொறுப்புகளை கொண்டிருக்கும் சவுதியின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான பின்லேடன் குழுமம் சவுதி அரசின் சார்பில் இக்கட்டடத்தையும் கட்டி வருகிறது.


இக்கட்டத்தில் ஏழு கோபுரங்களை கொண்ட விடுதிகளும் உண்டு. அதற்கு அப்ராஜ் அல் பேய்த் என்று பெயரிட்டப்பட்டுள்ளது. அந்த விடுதிகளில் 3000 அறைகள் உண்டு. முஸ்லிம்களின் தொழுகை திசையான ஹரம் சரீப் எனும் புனித பள்ளியை நோக்கிய வண்ணம் அதிகமான அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.


இந்த வளாகத்தை பேர்மான்ட் விடுதி குழுமம் நிர்வகிக்கும். இஸ்லாமிய அறக்கட்டளை அல்லது வக்ஃப் இன் கீழ் இயங்கி இரண்டு புனித பள்ளிகளுக்கான பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு இதன் வருமானம் சென்றடையும்.


கட்டடத்தின் ஒரு பகுதி சூனில் திறக்கப்படுகிறது. கோபுரக்கடிகாரம் புனித மாதமான ரமதான் மாதத்தில் திறக்கப்படும். மேற்கண்ட தகவலை துபாயில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதன் நிர்வாகி முகம்மது அல் அற்கூபி தெரிவித்தார்.


மூலம்[தொகு]