உலகின் முதல் உயிரணு லேசர் கண்டுபிடிப்பு
- 4 பெப்பிரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது
- 12 செப்டெம்பர் 2014: எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
- 14 சனவரி 2014: போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு
- 12 திசம்பர் 2013: உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது
- 9 திசம்பர் 2013: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை
வியாழன், சூன் 16, 2011
உலகின் முதலாவது உயிருள்ள சீரொளி (லேசர்) அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியொரு உயிரணுவில் இருந்து சீரோளியை உருவாக்க முடியும் என்பதை ஆராய்வு மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர். உயிரியல் அறிவும் வேதியியல் அறிவும் சேர்ந்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரு சிறப்புப் புரதம் உயிரணுவில் பச்சை நிறச் சீரோளியை உருவாக்குகின்றது என்பது இந்த ஆராய்வில் அறியப்பட்டது.
பச்சை ஒளிரிப் புரதம் (green fluorescent protein, GFP) என்னும் பெயர் கொண்ட ஒரு சிறப்புப் புரதம் 1960களில் இழுதுமீன்களில் (jellyfish) இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இது உயிரியல் உருவங்களின் படிம ஆராய்வுக்கு மிக்க உதவியாக இருந்துவருகின்றது. 2008-ல் வேதியியலுக்கான நோபெல் பரிசை மூவருக்கு ஈட்டிக்கொடுத்ததும் இந்தப் பச்சை ஒளிரிப் புரதமேயாகும்.
இதுவரை உயிரற்ற பொருட்கள் சீரொளியை வெளிவிடுமாறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன; 1971-இல் சாயம் ஒன்றுக்குள் செலற்றின் இடப்பட்டு சீரொளி வெளிவிடுமாறு ஆக்கப்பட்டது, 1975-இல் அல்ககோலின் ஒளி இயல்பில் மாற்றம் செய்தல் மூலம் ரம், வோட்கா போன்ற மதுபானங்கள் சீரோளியை உண்டாக்கியது. உயிருள்ள பொருட்கள் சீரோளியை வெளிவிடுவது என்பது ஒரு கற்பனைக் கதையாகவே இருந்துவந்தது. இன்று இது சாத்தியம் என்பது காணக்க்கூடியவாறு உள்ளது.
மசாச்சுசெட்சு பொது மருத்துவமனையில் ஒளி மருத்துவத்துக்கான வெல்மான் மையத்தில் மால்டே கெதர் மற்றும் சியோக் கையுன் யுன் ஆகியோரால் முன்னெடுத்து இந்த ஆராய்வு நிகழ்த்தப்பட்டது.
மனித சிறுநீரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணுக்கள் மரபணுப் பொறியியல் நுட்பம் மூலம் பச்சை ஒளிரிப் புரதத்தை உற்பத்தி செய்யக்கூடியவாறு மாற்றி அமைக்கப்பட்டது. இவ்வகை உயிரணுக்கள் பின்னர் இரு கண்ணாடிகளுக்கு இடையே வைத்து அவதானிக்கப்பட்டது, அவை பச்சைச் சீரொளியை வெளிவிடுவது அவதானிக்கப்பட்டது. நீலநிற ஒளி ஊடகத்தில் இவை அவதானிக்கும் போது இன்னமும் பிரகாசமான சீரொளி தென்படும். இவ்வாறு வெளிவிடப்படும் ஒளியை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் என்று யுன் தெரிவித்தார்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட உயிரணுக்கள் ஆய்வின் போதும் அதன் பின்னரும் உயிருடன் இருந்தன.
மருத்துவ உலகில் ஒளி சம்பந்தமான சிகிச்சைகளுக்கும் படிமங்களை ஆராயவும், மருத்துவ அறுதியிடலுக்கும் உயிரணுவை ஒளிரச்செய்வதன் மூலம் பற்பல சிக்கல்கள் தீரும், ஒட்டு மொத்தத்தில் இவ்வாராய்வு அறிவியலின் இன்னுமொரு படிக்கல்லாக அமைகின்றது.
உயிரினங்கள் யாவும் ஒளியை வெளிவிட முடியும் என்று ஒரு கற்பனை செய்தால், அது இப்படிப்பட்ட ஆய்வின்மூலம் வருங்காலத்தில் உண்மையாகும் என்பதை மறுக்கமுடியாது.
மூலம்
[தொகு]- Green Fluorescent Protein Makes for Living Lasers, சையன்டிபிக் அமெரிக்கன், சூன் 13, 2011
- Laser is produced by a living cell, பிபிசி அறிவியல், சூன் 13, 2011