உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தில் முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 31, 2011

கெய்ரோ நகரின் மத்திய பகுதியில் ஏழாவது நாளாக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று வெளியேறிய நிலைகளுக்கு மீண்டும் திரும்புமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கெய்ரோ நகர மத்தியில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

நாளை செவ்வாய்க்கிழமை அன்று பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு போராட்டக்காரர்கள் திட்டமிட்டு வருவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


30 ஆண்டுகளாகப் பதவி வகிக்கும் 82 வயதான அதிபர் ஒசுனி முபாரக்கைப் பதவியில் இருந்து விலகுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். தாம் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக முபாரக் அறிவித்துள்ளார். சனநாயக மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கும் அகமது சபிக்கிற்கு அதிபர் உத்தரவிட்டுள்ளர். ஆனாலும், முபாரக் பதவி விலகும் வரை போராட்டக்காரர்கள் ஓயப்போவதில்லை என செய்தியாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.


இதற்கிடையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை வர்த்தக நிலையங்களைச் சூறையாடுதல் மற்றும் வாகனங்களைத் தீக்கிரையாக்கல் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதால் தலைநகர் கெய்ரோ புகைமண்டலமாகக் காட்சியளிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களின் போதான வன்முறைகளில் இதுவரை 100 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன், முதலீட்டாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


இவ்வார்ப்பாட்டங்களை செருமனியின் பேர்லின் சுவர் வீழ்ச்சியுடன் ஒப்பிடும் வெளிநாட்டு அவதானிகள் இது அரபு உலகின் பேர்லின் தருணமெனத் தெரிவித்துள்ளனர்.


எகிப்தில் சிக்கியிருக்கும் ஆத்திரேலியச் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு வர சிறப்பு விமானம் ஒன்றை புதன்கிழமை அன்று அங்கு அனுப்பவிருப்பதாக ஆத்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்துள்ளார். எகிப்துக்கான முக்கியத்துவமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு தமது நாட்டு மக்களுக்கு பல மேற்கத்திய நாடுகள் பயண எச்சரிக்கையையும் விடுத்துள்ளன.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]