உள்ளடக்கத்துக்குச் செல்

எயிட்டியில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய இளம் பெண் 15 நாட்களின் பின் மீட்கப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 30, 2010


எயிட்டி தலைநகர் போர்ட் ஓ பிரின்சில் நிலநடுக்கம் ஏற்பட்டு 15 நாட்களின் பின்னர் இடிபாடுகளுக்குள்ளிருந்து 16 வயது இளம் பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.


பிரெஞ்சு மற்றும் எயிட்டி மீட்புக் குழுவினரால் இவர் வெளியில் கொண்டுவரப்பட்டபோது காலில் காயத்துடன் மிகவும் வாடிய நிலையில், இருந்த போதும் இவருக்குச் சுய நினைவு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


இடிபாடுகளுக்குள்ளிருந்து இச் சிறுமியின் குரலைக் கேட்ட சிலர் அப்பகுதியில் தேடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களைக் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 12 ஆம் திகதி ஏற்பட்ட பூகம்பத்தால் இடியுண்ட அவரது வீட்டின் சுவர் மற்றும் கதவுக்கிடையில் இச் சிறுமி சிக்குண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


மீட்புப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மேலும், பல புதிய பகுதிகளில் தேடுதலை முன்னெடுக்குமாறு ஹெய்டியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ஹெய்ட்டி தலைநகர் மற்றும் பல்வேறு நகரங்களில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 135 பேரை பன்னாட்டு மீட்புக் குழுவினர் இதுவரை உயிருடன் மீட்டுள்ளனர். இதுவரையில் சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரம் சடலங்கள் வரை மீட்கப்பட்டுள்ளன.


இயந்திரங்கள் மூலம் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீதிகளை சரிசெய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரெனி பிரிவெல் தெரிவித்துள்ளார்.

மூலம்

[தொகு]