எயிட்டியில் வாந்திபேதி நோய் பரவல், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 24, 2010

கரிபியன் தீவான எயிட்டியின் மத்திய பகுதிகளில் வாந்திபேதி நோய் (காலரா) பரவியதில் இருநூறுக்கும் அத்இகமானோர் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. 2,364 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக எயிட்டிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாந்திபேதி நோய்க் கிருமி

எயிட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரிலும் காலரா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஐவர் இனக்காணப்பட்டுள்ளதாக ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எயிட்டியில் ஒரு நூறாண்டு காலமாக இல்லாமலிருந்த இந்நோய் தற்பொழுது தொற்றுநோயாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.


இந்தத் தொற்றுநோய் எயிட்டியில் கடந்த சனவரி மாதம் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்தையடுத்து சுத்தமான குடிநீர் இன்றி ஆர்டிபோனைட் ஆற்று நீரைப் பொது மக்கள் குடிக்க நேர்ந்ததால் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலநடுக்கத்தில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்தனர். 15 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.


காலரா தொற்றுநோயினால் வாந்தி, வயிற்றுப் போக்கு, கடுமையான காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இது பரவி வருகின்றது.


காலரா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பராமரிக்க தற்காலிக மருத்துவகூடங்கள் அமைக்கத் தேவையான உபகரணங்களை யுஎஸ் எயிட் நிறுவனம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


காலரா தொற்றுநோய்க்கு அசுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற உணவே காரணம் எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு நோய்த் தடுப்பு ஊசிகளும் போடப்பட்டு வருகின்றன.


மூலம்[தொகு]