எலிசபெத் மகாராணியிடம் இருந்து விடுவிக்கும் நேரம் வந்துள்ளதாக ஜமேக்கா பிரதமர் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 8, 2012

ஜமேக்காவைக் குடியரசாக்கவும், எலிசபெத் மகாராணியை நாட்டின் தலைவர் பதவியில் இருந்து விலக்கவும் நேரம் வந்துள்ளதாகப் புதிதாகத் தெரிவாகியிருக்கும் ஜமேக்கா பிரதமர் போர்ட்டியா சிம்சன் மில்லர் தெரிவித்துள்ளார்.


தனது பதவியேற்பு விழாவில் உரையாற்றிய சிம்சன் மில்லர் பிரித்தானிய முடியாட்சியில் இருந்து விலகவும், எமது சனாதிபதி ஒருவரை நாமே தேர்ந்தெடுக்கவும் தருணம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். பிரித்தானியாவிடம் இருந்து ஜமேக்கா விடுதலை பெற்ற 50 ஆண்டுகள் நிறைவு இவ்வாண்டு ஆகத்து மாதத்தில் கொண்டாடப்படவிருக்கும் தருணத்தில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.


"சுயாட்சி பெற்ற நாடாக நாம் அடைந்த முன்னேற்றங்களைக் கொண்டாடும் நேரத்தில், எமது விடுதலை முழுமையாக்க வேண்டும்," எனப் பிரதமர் தெரிவித்தார். 66 வயதுள்ள திருமதி மில்லர் இரண்டாம் தடவையாகக் கடந்த டிசம்பர் 29 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.


இது குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜமேக்கா அரசுத்தலைவர் வெளியிட்டுள்ள கருத்து முழுமையாக ஜமேக்கா அரசினாலும், அந்நாட்டு மக்களினாலுமே கவனிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கரிபியன் தீவான ஜமேக்காவின் பொருளாதாரம் பெருமளவு வறுமை, வேலையின்மை, பெரும் கடன் சுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]