உள்ளடக்கத்துக்குச் செல்

ஏப்ரல் 13 இல் தமிழக சட்டசபைத் தேர்தல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 2, 2011

தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு இந்திய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேச சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.


தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும். தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும். தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும்.


தமிழக சட்டசபைக்கு மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30. ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும். புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற உள்ளன.


தமிழ்நாட்டில் நாலரைக் கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களும், புதுவையில், 80 லட்சம் வாக்காளர்களும், கேரளத்தில் 2.29 கோடி வாக்காளர்களும் உள்ளனர்.


மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7 மற்றும் மே 10 ஆகிய நாட்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். அஸ்ஸாம் மாநிலத்தில், ஏப்ரல் 4 மற்றும் 11 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமிலும் வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெறும். முதல் முறையாக, வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தத் தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். இந்தத் தேர்தலில், முதல் முறையாக, வாக்காளர்கள் புகார் தெரிவிக்க, அழைப்பு ஏற்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.


மூலம்

[தொகு]
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவில் இத்தலைப்புக் குறித்து மேலும் கட்டுரைகள் உள்ளன: