உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோப்பாவின் எர்செல் விண்வெளித் தொலைநோக்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 16, 2013

ஐரோப்பாவின் பில்லியன் யூரோ பெறுமதியான எர்செல் விண்வெளி அவதான நிலையத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.


எர்செல் விண்வெளித் தொலைநோக்கி
எர்செல் விண்கலம் அனுப்பிய ரொசெட் விண்முகிலின் (நெபுலா) படிமம்

எர்செலின் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று திங்கட்கிழமை அன்று இந்த செயற்கைக்கோளின் எரிபொருள் கலன்களை வெறுமையாக்கவும், அதன் தொடர்புகள் அனைத்தையும் நிறுத்தவும் உத்தரவிட்டனர். இந்த செயலிழந்த விண்கலம் தற்போது ஞாயிற்று ஒழுக்கிற்குள் பூமியில் இருந்து 2.14 மில்லியன் கிமீ தொலைவில் சூரியனைச் சுற்றி வருகிறது.


3.5 மீட்டர் கண்ணாடியும், மூன்று சிறப்பான உபகரணங்களையும் கொண்ட 7 மீட்டர் நீளமான இந்த விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட விண்வெளி அவதான நிலையங்களில் மிகவும் வலுக்கூடிய தொலைநோக்கி ஆகும். மீஅகச்சிவப்புக் கதிர்களுக்கு மிக்க உணர்திறனுள்ள இந்த எர்செல் விண் தொலைநோக்கி விண்மீன்களின் தோற்றம், விண்மீண் திரள்களின் வளர்ச்சியையும் ஆராய்வதற்காக 2009 ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.


இதன் தொடர்புகளைத் துண்டிப்பதற்கான கடைசிக் கட்டளை செருமனியின் டார்ம்ஸ்டட் நகரில் உள்ள ஐரோப்பிய விண்வெளிக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து திங்கட்கிழமை 12:25 மணிக்கு அனுப்பப்பட்டது. இக்கட்டளை தொலைநோக்கியைச் சென்றடைய ஆறு செக்கன்கள் பிடித்தது.


எர்செல் விண்வெளி அவதான நிலையம் அதன் இயக்கத்துக்குத் தேவையான திரவ ஈலியம் முடிவடைந்த நிலையில் தனது விண்வெளித் திட்டத்தை கடந்த ஏப்ரல் இறுதியில் நிறைவு செய்தது. இந்நிலையத்தின் உபகரணங்களை அதி குறைந்த வெப்பநிலையில் வைத்திருக்க திரவ ஈலியம் அவசியமானதாகும். எதிர்காலத்தில் இந்த விண்கலத்தில் வெடிப்புகள் நிகழாதிருக்க இவ்விண்கலத்தின் ஐதரசீன் எரிபொருள் தாங்கியும் வெறுமையாக்க உத்தரவிடப்பட்டது.


இவ்விண்கலத்தின் செயற்பாடுகள் நிறைவடைந்திருத்தாலும், எர்செலினால் சேகரிக்கப்பட்ட பெருமளவு தகவல்கள் வானியலாளர்களால் ஆராயப்பட்டு வருகிறது.


எர்செல் விண்கலம் 2009 ஆம் ஆண்டில் பிளாங்க் வானாய்வியுடன் இணைந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இது தற்போது பூமியின் இருட்டுப் பகுதியில் 1.5 மில்லியன் கிமீ தூரத்தில் இரண்டாவது லக்கிராஞ்சன் புள்ளியில் (L2) நிலை கொண்டுள்ளது. எர்செல் விண்கலமும் இந்த இடத்திலேயே நிலை கொண்டிருந்து, அதன் செயற்பாடுகள் நிறைவடைந்த நிலையில் வேறு இடத்திற்கு அகற்றப்பட்டது.


பிளாங்க் தொலைநோக்கி இவ்வாண்டு அக்டோபரில் தனது திட்டத்தை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஐரோப்பிய வெண்வெளி ஆய்வு நிறுவனமான ஈசாவின் இரண்டாம் லாக்ராஞ்சன் புள்ளிக்கான அடுத்த தொலைநோக்கித் திட்டம் காயா (Gaia) ஆகும். இவ்வாண்டு செப்டம்பரில் ஏவப்படவிருக்கிறது.


மூலம்

[தொகு]