உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோப்பாவின் கெப்லர் சரக்கு விண்கலம் பசிபிக் கடலில் எரிந்து வீழ்ந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 22, 2011

ஐரோப்பாவின் அதிநவீன சரக்கு விண்கலம், யொகான்னசு கெப்லர் தெற்கு பசிபிக் கடலில் தானியங்கியாக எரிந்து வீழ்ந்தது.


யொகான்னசு கெப்லரின் மாதிரி வடிவம்

இவ்விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து 1.3 தொன் எடையுள்ள கழிவுப் பொருட்களை ஏற்றி வந்தது. இது நேற்று செவ்வாய்க்கிழமை ஜிஎம்டி 2100 மணிக்கு பூமியின் வளிமண்டலத்துள் நுழைந்துள்ளது.


விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகளும், அது ஏற்றிவந்த கழிவுப்பொருட்களும் ஆவியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. விண்கலத்தின் சில துண்டுகளே கடலில் வீழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


கெப்லர் விண்கலத்தின் நான்கு மாதப் பயணம் நேற்றுடன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. விண்வெளி நிலையத்துக்கு ஏழு தொன்களுக்கும் அதிகமான எரிபொருள், உணவு, மற்றும் உபகரணங்களை இது கொண்டு சென்றது.


பன்னாட்டு விண்வெளி நிலையம் அமைந்துள்ள உயரத்தை தனது அமுக்கி மூலம் மேலும் அதிகரிக்கச் செய்தமை கெப்லரின் மற்றுமொரு முக்கிய பணியாக இருந்தது. இதன் மூலம் விண்வெளி நிலையத்தின் பூமியில் இருந்தான உயரம் 360 கிமீ உயரத்தில் இருந்து 380 கிமீ ஆக அதிகரித்தது.


யொகான்னசு கெப்லர் என்ற இந்தச் சரக்குக் கப்பல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் Automated Transfer Vehicle (ATV) என்ற வகையில் இரண்டாவது தானியங்கிக் கப்பலாகும். ஜூல்ஸ் வேர்ன் என்ற முதலாவது கப்பல் 2008 ஆம் ஆண்டில் தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது.


எதிர்காலத்தில் மேலும் மூன்று சரக்கு விண்கலங்களை விண்வெளி நிலையத்தை நோக்கி அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. எடுவார்டோ அமால்டி என்ற விண்கலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஏவப்படும். அடுத்த இரண்டும் 2013, 2014 ஆம் ஆண்டுகளில் அனுப்பபடும்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]