ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 12, 2012

தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களை எடுத்துப் படுதோல்வி கண்டது. ஒருநாள் பன்னாட்டுத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி பெற்ற மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.


போட்டியில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 301 ஓட்டங்களைப் பெற்றது. ஆசிப் அம்லா (112) சதம் அடித்து இவ்வாண்டின் முதலாவது சதத்தினைப் பதிவு செய்தார். பந்துவீச்சில் இலங்கை சார்பில் மலிங்கா 5 இலக்குகளைக் கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20.1 ஓவர்களில் 43 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவிக்கொண்டது.


ஏற்கனவே மேற்கிந்தியத் தீவு துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1986ம் ஆண்டில் சார்ஜாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 55 ஓட்டங்கள் பெற்றமை குறைவான ஓட்டங்களாக இருந்து வந்தது. பன்னாட்டு ஒருநாள் அரங்கில் மிகக் குறைந்த ஓட்டங்களை எடுத்த அணிகளின் பட்டியலில் தற்போது இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சிம்பாப்பே (35 ஓட்டங்கள், எதிர். இலங்கை, ஹராரே, 2004) உள்ளது. 2, 3வது இடங்களில் முறையே கனடா (36 ஓட்டங்கள், எதிர், இலங்கை, பார்ல், 2003), சிம்பாப்பே (38 ஓட்டங்கள், எதிர் இலங்கை, கொழும்பு 2001) அணிகள் உள்ளன.


மூலம்[தொகு]