உள்ளடக்கத்துக்குச் செல்

கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளின் காணொளியை போக்கோ அராம் போராளிகள் வெளியிட்டனர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 12, 2014

கடந்த மாதம் நைஜீரியாவின் பள்ளி ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 130 மாணவிகளைக் கொண்ட காணொளியை போக்கோ அராம் போராளிகள் வெளியிட்டுள்ளனர். அரசினால் பிடிக்கப்பட்டிருக்கும் தமது போராளிகள் அனைவரையும் விடுவிக்கும் வரை இவர்கள் தமது காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள் என குழுவின் தலைவர் அபூபக்கர் சேக்காவு காணொளியில் கூறினார்.


மாணவிகள் அனைவரும் இசுமாம் மதத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்கள் என அவர் கூறினார். மாணவிகள் வழிபடுவதை இன்று வெளியிடப்பட்ட காணொளி காட்டியது.


நைஜீரியாவின் வடக்கே போர்னோ நகரில் கடந்த மாதம் ஏப்ரல் 14 இல் சுமார் 200 மாணவிகள் ஆயுதமுனையில் கடத்தப்பட்டனர். இவர்களை அடிமைகளாக விற்கப்போவதாக போக்கோ அராம் போராளிகள் முன்னர் கூறியிருந்தனர்.


இன்று வெளியிடப்பட்ட 17-நிமிடக் காணொளியில் மாணவிகளில் மூவர் உரையாற்றுவதும் காட்டப்பட்டது. தாம் துன்புறுத்தப்படவில்லை என அவர்களில் ஒருவர் கூறினார். அவர்களில் இருவர் தாம் கிறித்தவர்கள் என்றும், தற்போது இசுலாமியராக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மற்றவர் தாம் ஒரு முஸ்லிம் எனக் கூறினார்.


போக்கோ அராம் என்பது "மேற்கத்தைய கல்வி ஒரு பாவச் செயல்" எனப் பொருள். மாணவிகள் பாடசாலை செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் திருமணம் புரிய வேண்டியவர்கள் என அக்குழு கூறியுள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் இக்குழு அரசுடன் ஆயுதப் போரில் ஈடுபட்டு வருகிறது.


மூலம்

[தொகு]

பகுப்பு;நைஜீரியா