உள்ளடக்கத்துக்குச் செல்

கடாபியின் இளைய மகன் நேட்டோ வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 1, 2011

லிபியத் தலைநகர் திரிப்பொலி மீது நேட்டோ வான் தாக்குதல் நடத்தியதில் லிபியத் தலைவர் முஆம்மர் கடாபியின் இணைய மகன் சயீப் அல்-அராப் கொல்லப்பட்டதாக அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


வான் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடத்தில் கேர்ணல் கடாபியும் தங்கியிருந்தார் என்றும் ஆனால் அவருக்கு எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கடாபியின் இளைய மகன் சயீப் உடன் கடாபியின் மூன்று பேரப் பிள்ளைகளும் உயிரிழந்தனர்.


இத்தாக்குதலை உறுதிப் படுத்தியுள்ள நேட்டோ பேச்சாளர், தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடவில்லை. "நேட்டோவின் தாக்குதல்கள அனைத்தும் இராணுவ நிலைகள் மீதே நடத்தப்படுகின்றன... தனிப்பட்ட எவரையும் நாம் குறி வைக்கவில்லை," என நேட்டோ பேச்சாளர் லெப்-ஜெனரல் சார்ல்ஸ் பூச்சார்ட் தெரிவித்தார். "உயிரிழப்புகள் குறித்து நாம் கவலை அடைகிறோம், குறிப்பாக தற்போதைய பிரச்சனையில் பொதுமக்கள் பலர் உயிரிழக்கிறார்கள்," என அவர் தெரிவித்தார்.


கடாபியின் ஆறாவது மகனான 29 வயது சயீப் அல்-அராப் கடாபி செருமனியில் கல்வி பயின்று சில நாட்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்தார். லிபியாவின் கிழக்கில் எதிராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெங்காசி நகரில் சயீப் கொல்லப்பட்டதைக் கொண்டாட அங்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன.


கடாபியின் வளர்ப்பு மகள் ஒருவர் 1986 ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டிருந்தார்.


மூலம்

[தொகு]