கடாபியின் சொந்த நகரான சிர்தேயைக் கைப்பற்றியதாகக் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 28, 2011

லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் படைகள் வசமிருக்கும் பகுதிகளை மீளக் கைப்பற்றிவரும் கிளர்ச்சியாளர்கள் தற்போது மேற்குப் பகுதியில் கடாபியின் சொந்த நகரான சிர்தே தம் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இன்று அதிகாலை உள்ளூர் நேரம் 1:30 மணிக்கு எதிரணியின் படைகள் சிர்தே நகருக்குள் பிரவேசித்ததாக எதிரணியினரின் தேசியக் கவுன்சிலின் பேச்சாளர் சம்சி அப்துல் மோலா அல்ஜசீரா செய்தியாளருக்குத் தெரிவித்தார். சிர்தே திரிப்பொலியில் இருந்து 280 மைல் கிழக்கே அமைந்துள்ளது.


"நகருள் நுழையும் போது அங்கு ஆயுதப்படைகள் எவரும் இருக்கவில்லை. எவ்வித எதிர்த்தாக்குதலும் நடத்தப்படவில்லை," என பெங்காசியில் உள்ள அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்தார். லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசி நகரம் ஏற்கனவே கிளர்ச்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. இச்செய்தியை பெங்காசியில் மக்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள்.


எனினும் சிர்தே கைப்பற்றப்பட்ட செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என அல்ஜசீரா தெரிவிக்கிறது. சிர்தே இன்னும் அரசின் கைவசம் உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அரிவித்துள்ளது.


ஞாயிறன்று பெரும் எண்ணிக்கையான இராணுவ வாகனங்கள் சிதேயை விட்டு வெளியேறி தலைநகர் திரிப்பொலி நோக்கி நகர்ந்துள்லதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதற்கிடையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் அரசு மற்றும் எதிர்ப்புப் படைகளிடையே கடும் சண்டை நிகழ்ந்து வருகின்றது. எண்ணெய் வள நகரான அஜ்தபியாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள கிளர்ச்சியாளர்கள் பிரேகாவையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு உதவியாக நேட்டோ படைகள் வான் வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.


மிஸ்ராடா நகரின் விமானப் படைத்தளத்தில் பிரெஞ்சுப் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் லிபியாவின் 5 விமானங்களும் 2 உலங்குவானூர்திகளும் அழித்தொழிக்கப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கூட்டுப்படைகளின் தாக்குதலில் இதுவரை 100 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாக லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


லிபியாவைக் கடந்த 41 ஆண்டுகளாக ஆண்டு வரும் முஆம்மர் கடாபியின் ஆட்சியை அகற்றுவதற்கு கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதியன்று லிபியாவில் எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. ஐ.நா பாதுகாப்பு அவை லிபிய வான் எல்லையில் விமானம் பறக்கத் தடை விதித்தது.


மூலம்[தொகு]