கடைசி பின்டா ஆமை 'தனியன் ஜோர்ஜ்’ 100வது வயதில் இறந்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 26, 2012

எக்குவடோரில் உள்ள கலாபகசு தேசியப் பூங்காவில் வசித்து வந்த மாபெரும் ஆமை ஒன்று இறந்துவிட்டதாக பூங்கா அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இவ்வகை இராட்சத ஆமை இனத்தில் உயிர் வாழ்ந்த கடைசி ஆமை இதுவென நம்பப்படுகிறது. இந்த ஆமை தனிமையிலேயே தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வந்ததால் இதற்கு "தனியன் ஜோர்ஜ்" (Lonesome George) எனப் பெயரிடப்பட்டிருந்தது.


தனியன் ஜோர்ஜ்

பின்டா தீவு ஆமை என அழைக்கப்படும் ஜோர்ஜின் வயது 100 இருக்கும் என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இறப்பிற்கான காரணத்தை அறிய இந்த ஆமையின் உடல் பரிசோதனைக்காக அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆமைக்கு வாரிசுகளோ அல்லது இதன் இனத்தவர்களோ இல்லாததால், இது மிக அரிதான உயிரினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளாக இந்த ஆமையைப் பாதுகாத்து வந்தவர் பௌஸ்டோ லெரேனே என்பவர். ஆமையின் அடைப்பிடத்தில் இறந்து கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது.


பின்டா தீவு ஆமையை வேறு வகைப் பெண் ஆமைகளுடன் சேர்க்கையை உண்டாக்கி அதன் வாரிசுகளை உருவாக்க சூழலியலாலர்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இவ்வகை ஆமைகள் 200 ஆண்டுகள் வரையில் உயிர் வாழும் என நம்பப்படுகிறது.


லோன்சம் ஜோர்ஜை முதன் முதலாக 1972 ஆம் ஆண்டில் கலாபகசுத் தீவுகளில் ஒன்றான பின்டா தீவில் ஒரு அங்கேரிய அறிவியலாளர் முதன் முதலில் கண்டுபிடித்தார். இவ்வகை ஆமையினம் முற்றாக அழிந்து விட்டதாக அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.


15 ஆண்டுகளாக வூல்ஃப் எரிமலைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஆமை ஒன்றுடன் இது வாழ்ந்து வந்து ஒன்று கூடிய போதும் அதன் முட்டைகள் கருவற்றவையாகவே இருந்தன. எசுப்பனியோலா தீவு பெண் ஆமைகளுடனும் சேர்ந்து வாழ்ந்த போதும் அவற்றுடன் கூட மறுத்து விட்டது.


லோன்சம் ஜோர்ஜைப் பார்ப்பதற்கு ஆண்டு தோறும் 180,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இவ்விடத்திற்கு வருவர். ஜோர்ஜின் உடல் பெரும்பாலும் பதனிடப்பட்டு எதிர்காலச் சந்ததிக்காகப் பாதுகாக்கப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.


19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் இத்தீவுகளில் ஆமைகள் பெருமளவு இருந்த போது, பின்னர் இங்கு ஆடுகள் கொண்டுவரப்பட்டதை அடுத்து இவற்றின் தொகை குறைய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 20,000 வேறு பெரிய வகை ஆமைகள் கலபாகசுத் தீவுகளில் இப்போதும் காணப்படுகின்றன.


சார்ல்ஸ் டார்வின் கடல் வழியே எச்.எம்.எசு பீகல் என்னும் கப்பலில் கலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகளுக்காக இத்தீவுகள் பெருமை அடைந்தன.


மூலம்[தொகு]