கணையாழி கலை இலக்கிய இதழ் மீண்டும் வெளிவரத் தொடங்கியது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

கணையாழி தமிழ் இலக்கிய இதழ் மீண்டும் நேற்று வியாழக்கிழமை முதல் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னை, திநகர் வாணிமகாலில் இடம்பெற்றது.


'கணையாழி' மாத இதழ் செய்திகளையும், சுவையான பகுதிகளையும் தாங்கிய இதழாகப் தினமணியின் முன்னாள் ஆசிரியர் கி. கஸ்தூரிரங்கன் அவர்களால் 1965 இல் தில்லியில் தொடங்கப்பட்டது. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள் இதில் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். 1995 முதல் கி. கஸ்தூரிரங்கனால் தொடர்ந்து நடத்தப்பட்ட கணையாழி, நின்று போகக் கூடிய சூழலில் தசரா அறக்கட்டளை சிறிது காலம் பொறுப்பேற்று நடத்தியது.


புதிய ஆசிரியர் குழுவில் மா. ராசேந்திரன், கவிஞர் சிற்பி, மு.ராமசாமி, ட்ராட்ஸ்கி மருது, கி.நாச்சிமுத்து, பிரசன்னா ராமசாமி, சுபாஷினி ட்ரெம்மல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கம் அவர்களைப் பதிப்பாளராகக் கொண்டு கணையாழி இதழ் வெளிவருகிறது.


வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் இதழை வெளியிட, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். நடிகர் நாசர், கவிஞர் நா. முத்துக்குமார், குட்டி ரேவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்குத் தலைமையேற்று உரையாற்றிய எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி "இப்போதுள்ள பல வெளியீடுகளில் ஒரு சிறுகதைக்கு மேல் இன்னொரு சிறுகதைக்கு இடமில்லை. தமிழ்ப் பத்திரிகைகளில் குறுநாவல்களைப் பார்க்க முடிவதில்லை. இது போன்ற குறைகளைப் போக்கும் வகையில் கணையாழி இதழ் இருக்கும்," என்றார். கவிதா பதிப்பகத்தின் சேது சொக்கலிங்கம் நன்றி கூறினார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg