கம்போடிய அங்கூர் வாட்டை ஒத்த கோயில் இந்தியாவில் அமைக்கப்படவிருக்கிறது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 6, 2012

கம்போடியாவில் உள்ள அங்கூர் வாட் கோயிலைப் போன்ற அமைப்புடைய இந்துக் கோயில் ஒன்றை இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிர்மாணிக்கும் பணியொன்றை மகாவீர் மந்திர் அறக்கட்டளை என்ற இந்து நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது. இது உலகின் மிகப் பெரிய இந்துக் கோயிலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.


கம்போடியாவில் உள்ள அங்கூர் வாட் கோயில்

20 மில்லியன் டாலர்கள் செலவில் அமைக்கப்படவிருக்கும் இந்தக் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் பீகாரின் தலைநகர் பட்னாவில் இருந்து 25 கிமீ தூரத்தில் கங்கைக் கரையில் நேற்று இடம்பெற்றது. இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் 10 ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரின் வைசாலி மாவட்டத்தில் 40 ஏக்கர் காணியில் இது அமைக்கப்படவுள்ளது.


யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக வகைப்படுத்தப்பட்டுள்ள அங்கூர் வாட் 12ம் நூற்றாண்டில் இந்துக் கோயிலாக சூரியவர்மனால் கட்டப்பட்டது. ஆனால் அது இப்போது ஒரு பௌத்த வழிபாட்டுத்தலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


"கம்போடியக் கோயிலை விட இக்கோயில் உயரமானதாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கும்," என இந்து அறக்கட்டளையின் செயலர் கிசோர் குணால் ஆச்சாரியார் தெரிவித்தார். "வீராட் அங்கூர் வாட் ராமர் கோயில் என இக்கோயில் அழைக்கப்படும். இங்கு இராமர் மட்டுமல்லாமல், சிவன், பார்வதி, விநாயகர், கிருட்டிணன், விஷ்ணுவின் 10 அவதாரங்கள் ஆகியோருக்கும் கோயில்கள் அமைக்கப்படும்", என அவர் கூறினார்.


இராமர் தமது பயணத்தின் போது இந்த இடத்தைத் தரிசித்ததாகவும், வைசாலி இராச்சியத்தின் அரசன் சுமதியினால் அவர் வரவேற்கப்பட்டதாகவும் திரு. குனால் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


மூலம்[தொகு]