உள்ளடக்கத்துக்குச் செல்

கரப்பான் பூச்சியின் மூளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆற்றல்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டம்பர் 7, 2010


கரப்பான் பூச்சியும் வெட்டுக்கிளியும் மனிதரின் உயிர் காக்கும் மருத்துவர்களாக மாறும் நாள் தொலையில் இல்லை என இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் லீ என்பவரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பூச்சிகளின் மூளையில் காணப்படுகின்ற வேதிக் கூறுகள் பல தீங்குதரும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கரப்பான் பூச்சி

பொது நுண்ணுயிரியலுக்கான குமுகாயத்தின் கூட்டம் ஒன்றிலேயே இந்த ஆய்வு குறித்து அறிவிக்கப்பட்டது.


கரப்பான் பூச்சி (வட்டார வழக்கில் பாச்சா, பாச்சை) அழுக்கு நிறைந்த சூழலிலும் உயிர் வாழும் தன்மையது. அங்கே தொற்றுநோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும். இருப்பினும் அந்நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி கரப்பான் பூச்சியின் மூளைப்பகுதியில் காணப்படும் வேதிக் கூறுகளுக்கு உள்ளது. கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கப்படுவது வியப்பைத் தருகிறது என்று அறிவியலார் கருதுகின்றனர். நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டால் சாவு உறுதி. ஆனால் கரப்பான் பூச்சியிடம் நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் மிகுதியாகவே உள்ளது.


சாதாரணமாக, நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகள் நோய் எதிர்ப்புத்திறனை ஓரளவுக்குத்தான் கூட்டுகின்றன. தொடர்ந்து அம்மாத்திரைகளின் செயல்திறனைச் சில நுண்ணுயிரிகள் எளிதில் சமாளிக்கவும் பழகிக்கொள்கின்றன. எனவே, மாத்திரைகளின் திறனைக் கூட்டிக்கொண்டே போகவேண்டிய கட்டாயம் எழுகிறது.


கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% திறம் கொண்டவையாக உளவாம்.


இக்கண்டுபிடிப்பின் விளைவாக மருத்துவத் துறை பயன்பெறும் என்றாலும் அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று ஆய்வாளர் கூறுகின்றனர். முதலில் இன்னும் விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். பின் மருந்துவகைகள் ஆக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் மருந்து சந்தைக்கு வரும். ஆனால் மதிப்பற்ற கரப்பான் பூச்சியும் விரைவில் மனிதரின் உயிர்காக்கும் நண்பனாக மாறலாம் என்பது வியப்புதான்!

மூலம்[தொகு]