கருக்கலைப்புத் தொடர்பான புதிய சட்டமூலத்திற்கு அயர்லாந்து மக்கள் ஆதரவு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 2, 2012

அயர்லாந்தில் கருக்கலைப்புக்குப் புதிய சட்டமூலம் இயற்றப்பட வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.


தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்ய இடமளிக்க 80 வீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


அயர்லாந்தில் சவிதா என்ற இந்தியப் பல் மருத்துவர் ஒருவர் கருச்சிதைவினால் கடந்த மாதம் இறந்ததை அடுத்து நாடெங்கும் இந்தக் கருத்துக் கணிப்பு இடம்பெற்றது. கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்படாததாலேயே இப்பெண் இறந்ததாக அவரின் உறவினர் தெரிவித்தனர்.


கருக்கலைப்புக்குப் புதிய சட்டங்களைக் கொண்டுவர ஐரிய அரசு தீர்மானித்துள்ளது. இது பற்றிய அறிவித்தல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவிருக்கிறது. ஆனாலும் புதிய சட்டமூலம் நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுக்கும் அதிகமான காலம் தேவைப்படும் எனத் தெரிகிறது.


கருக்கலைப்புக்கு ஆதரவானோர் அயர்லாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சவிதாவின் இறப்பு இந்தச் சட்டமூலத்தின் அவசரத் தேவையை வலியுறுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.


அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டவிரோதமானதாகும். ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 4,000 ஐரியப் பெண்கள் கருக்கலைப்புக்காக இங்கிலாந்து, மற்றும் வேல்சுக்குச் செல்கின்றனர்.


மூலம்[தொகு]