உள்ளடக்கத்துக்குச் செல்

கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதி கோரி சுப்பிரமணிய சுவாமி மனு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 9, 2011

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் முதல்வர் கருணாநிதி விருப்புரிமையின் கீழ் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுவது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மனு அளித்துள்ளார். அந்த மனுவை நேரில் பெற்றுக் கொள்ள ஆளுநர் மறுத்துவிட்டதையடுத்து மனுவை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் பாதுகாவல் அதிகாரியிடம் சாமி கையளித்துள்ளார்.


இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், மனைகள் மற்றும் வீடுகளை அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ் ஒதுக்கீடு செய்ததில் விதிகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், அதிகாரத்தில் உள்ளவர்களில் வேண்டியவர்களுக்கும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் மனு அளித்துள்ளேன். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உதவியாளருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனையை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை ஆகிய விவரங்களையும் மனுவுடன் சமர்பித்துள்ளேன். அனுமதி கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படும் என்றார்.


அதே நேரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். ஒதுக்கீடு குறித்த தகவல்களை கருணாநிதி சட்டப்பேரவையின் முன் செவ்வாயன்று வைத்தார். "விருப்புரிமை அடிப்படையில் வீடு, மனை ஒதுக்கீடு செய்வது முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுதான். மேலும் 10 சதவீத ஒதுக்கீடு என்பதை 15 சதவீதமாக உயர்த்தியதும் அ.தி.மு.க ஆட்சியில்தான்." என்று அவர் தெரிவித்துள்ளார்.


"விருப்புரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்வது என்பது சலுகை விலையை கொடுப்பது அல்ல. குலுக்கல் அடிப்படையிலும், சந்தை விலை நிலவரப்படி வீட்டு வசதி வாரியம் நிர்ணயித்த விலையின் அடிப்படையில்தான் ஒதுக்கீடு செய்யப்படும்." என்று தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார். ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சுப்பிரமணியசாமி கூறியிருப்பது விஷமத்தனமானது, அவர் உண்மைகளை திரித்துக் கூறுகிறார். அது நடவடிக்கைக்கு உரியது" எ‌ன முதல்வர் எச்சரித்துள்ளார்.


மூலம்

[தொகு]