உள்ளடக்கத்துக்குச் செல்

கருணை மனுவை நிராகரிக்க 'அதிக காலம்', இந்தியாவில் 15 பேரின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 21, 2014

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை நிராகரிக்க நீண்ட காலம் எடுத்து விட்டதாகக் கூறி, 15 பேரின் மரண தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் இன்று ஆயுள்தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பழனிசாமி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்திசிங் ஆகிய மூவர் கொண்ட அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.


இன்றைய வரலாற்றும் புகழ் மிக்க தீர்ப்பை மனித உரிமை வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். வருங்காலத்தில் மரணதண்டனைகளைக் குறைக்க இது வழிகோலும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தனிமைச் சிறையில் அடைப்பது சட்டவிரோதம் எனவும், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.


இன்று உச்சநீதிமன்றத்தில் இப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த 15 பேர் தொடுத்த வழக்கில், 13 பேருக்கு கருணை மனு மீதான முடிவை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டமையைக் காரணம் காட்டி மகன்லால், சுந்தர்சிங் ஆகிய இருவரின் தூக்குத்தண்டனையும் ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.


இன்றைய தீர்ப்பின் விளைவாக சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் என மரணதண்டனை பெற்றுள்ள மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகியோரின் தண்டனைகளும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.


இதேவேளையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரினது தண்டனையும் உறுதியாக ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது, என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். இவர்களின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில், வருகிற சனவரி 29 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.


மூலம்

[தொகு]