உள்ளடக்கத்துக்குச் செல்

கறுப்புப் பணத்தை மீட்கும் போராட்டத்தில் பாபா ராம்தேவ்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 5, 2011

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நடுவண் அரசு திரும்பக் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து யோகாசனப் பயிற்சி ஆசிரியரான பாபா ராம்தேவ் தில்லியின் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை நேற்று துவக்கினார். அவரின் ஆதரவாளர்கள் பலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.


கறுப்புப் பணம் குறித்து மக்கள் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். அது குறித்து மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறும் ராம்தேவ், லஞ்சமாக கொடுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை முழுமையாக வெளிக் கொண்டு வந்தால் அதன் பிறகு நாட்டில் யாருமே பசியோடு இருக்கமாட்டாரகள், வேலை இல்லாத் திண்டாட்டத்தையும், எழுத்தறிவின்மை பிரச்சனையையும் நம்மால் ஒழிக்க முடியும் என்றும், போராட்டத்தை ஆரம்பித்த பிறகும் அரசுக்கும் தனக்கும் இடையான பேச்சுக்கள் தொடர்வதாகவும் ராம்தேவ் கூறியுள்ளார்.


அதே நேரம் கறுப்புப் பணம் தொடர்பான பிரச்சனையை ஒரே நாளில் தீர்க்க முடியாது என்று கூறும் மத்திய அரசு இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள நிபுணர் குழுக்களை அமைத்துள்ளது.


பாபா ராம்தேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிட்சத் ஆகிய அமைப்புகள் இருப்பதாக ஆளும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த உண்ணாவிரதத்துக்கு ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தனது தொண்டர்களை பெருமளவில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பர் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.


இந் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியே ஆர்எஸ்எஸ் தான். உண்ணாவிரத்ததில் எங்கும் எதிலும் ஆர்எஸ்எஸ் மயமாகவே உள்ளது. பாபா யோகா கற்றுக் கொடுத்தால் அதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால், அரசியல் செய்தால் முதலில் அவர் அரசியலுக்கு வந்துவிட்டு அதைச் செய்ய வேண்டும்என்று கூறியுள்ளார்


ஆனால், தனக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று ராம்தேவ் கூறியுள்ளார்.

மூலம்[தொகு]