உள்ளடக்கத்துக்குச் செல்

கலைஞர் காப்பீட்டு திட்டதைக் கைவிட ஜெயலலிதா முடிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 3, 2011

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இரத்துச் செய்யப்படுவதாக தமிழக ஆளுநர் எஸ். எஸ். பர்னாலா தெரிவித்துள்ளார்.


தமிழகச் சட்டசபையின் முதல் கூட்டம் இன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அவர் தெரிவித்தார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருந்தது. அதே நேரத்தில் தி.மு.க., கொண்டுவந்த திட்டங்கள் மாற்றம் கொண்டு வருவதும் சிலவற்றை ரத்து செய்வதும், தொழில்துறை ஊக்கம் அளிப்பதும் என பல்வேறு திட்டங்கள் இருந்தன.


கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, அதற்குப் பதில் புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தற்போது இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டு சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும். இலங்கையில் போரினால் பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். எஞ்சியுள்ள தமிழர்களும் உரிய கெளரவத்துடன் அவரவர் பகுதிகளிலேயே வாழ, உரிய மறுவாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது இந்த அரசு. தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அகதிகளின் குழந்தைகள் கல்வி பயில தேவையான வசதிகள் செய்து தரப்படும். அவர்கள் வேலைவாய்ப்பு பெற சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் நீடிக்கப்படும்.


ஆளுநர் உரைக்குப் பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த 4 நாட்கள் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இத்தீர்மானம் வரும் 10ம் நாள் நிறைவேற்றப்பட்டு கூட்டத்தொடர் நிறைவுறும். 10ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதிலுரை நிகழ்த்துவார்.


மூலம்

[தொகு]