உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிபுரம் பட்டுப்புடவைக்கு காப்புரிமம் பெறப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டெம்பர் 1, 2010

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் பூகோள குறியீட்டுச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கைத்தறி துறையின் காஞ்சிபுரம் மாவட்ட இணை இயக்குநர் பழனிச்சாமி தெரிவித்தார்.


காஞ்சிபுரம் நெசவாலை ஒன்றில் பட்டுப்புடவை நெசவு செய்யப்படுகிறது

காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகள் மட்டுமே “காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்” என்று அழைக்கப்படும் என திரு. பழனிச்சாமி பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் காஞ்சிபுரம் பட்டுபுடவைகளுக்கு என தனி முத்திரை பதிக்கப்பட்டு அதற்கு கீழே RGI என குறிக்கப்பட்டிருக்கும். இந்த முத்திரையை உபயோகப்படுத்த பதிவு செய்து கொள்ளாதவர்கள், இனி காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் என்கிற பெயரில் விற்பனை செய்தால் ஆறு மாதத்திலிருந்து மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் அவர் கூறினார்.


இதன் மூலம் இவ்வகைப் புடவைகளை தயாரிக்கும் நெசவாளர்களும், நுகர்வோர்களும் பயன் பெறுவர் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மூலம்