உள்ளடக்கத்துக்குச் செல்

கால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் பிரேசில் தோல்வி

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 3, 2010

தென்னாப்பிரிக்காவில் எலிசபெத் துறையில் நேற்று இடம்பெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் காலிறுதியில், 5 முறை சாம்பியனும், இந்த உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் நாட்டு அணியை நெதர்லாந்து 2-1 கோல்கள் என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.


ஆட்டம் தொடங்கியது முதலே பிரேசில் வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ரொபின்ஹோ போட்ட கோலின் மூலம் 1-0 என்ற கணக்கில் பிரேசில் முன்னிலை பெற்றது. 53 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஃபெலிப்பே மேலோ போட்ட கோலைத் தொடர்ந்து சமநிலையைத் தக்கவைக்க பெரிதும் சிரமப்பட்டது.


68-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் உவெஸ்லி ஸ்நைடர் மேலும் ஒரு கோல் அடித்து அணிக்கு 2-1 என்று முன்னிலையைப் பெற்றுத் தந்தார். நெதர்லாந்து வீரர்களின் சிறப்பான தடுப்பு ஆட்டத்தால் பிரேசில் வீரர்கள் கோல் அடிக்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பையும் பிரேசில் வீரர்கள் தவற விட்டனர். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.


பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பிரேசில் காலிறுதியில் தோற்றது அந்நாட்டு ரசிகர்களை மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள பிரேசில் அணியின் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


நேற்று இடம்பெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணி கானாவை வென்றது. ஜூலை 6 ஆம் நாள் இடம்பெறும் அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்துடன் உருகுவே மோதுகிறது.

மூலம்

[தொகு]