காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் மீண்டும் வன்முறை: பெங்களுருவில் 144 தடை உத்தரவு அமல்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டெம்பர் 13, 2016

காவிரி நதி பாயும் விவர வரைபடம்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கர்நாடகாவில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கர்னாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களுருவில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக (செப்டம்பர் 12, காலை) 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டதாக வந்த தவறானத் தகவல் என கர்நாடக காவல்த்துறை மறுத்திருந்த நிலையில், மாலையில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 20-ஆம் நாள் வரை தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட இந்திய உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்த நிலையில், கர்நாடாகாவில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

இச்சூழ்நிலையில், கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழகத்துக்கான அனைத்துப் பேருந்துகளையும் நிறுத்தி வைத்துள்ளதோடு, மைசூர் பகுதிகளில் கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு நிலவரம்[தொகு]

பெங்களூருவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வன்முறைகள் வெடித்துள்ள நிலையில், பெங்களூரில் மக்கள் பதற்றமும் பீதியும் அடைந்துள்ளார்கள். 12.30 மணி முதல் நம்ம மெட்ரோ சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

குறிப்பாக, மைசூரு சாலையில் குழப்பமான சூழ்நிலை நீடித்ததால். தனியார் பள்ளிகள் குழந்தைகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களை அறிவுறுத்தப்பட்டது. சில தனியார் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர்வதை உறுதி செய்ய கூடுதல் ஆசிரியர்களை ஈடுபடுத்தப்பட்டனர்.

சமூக வலைத்தளங்களில் ஐடி துறையைச் சார்ந்தவர்கள், தமிழ்நாடு பதிவு வாகனங்களை எடுத்து கொண்டு சாலைகளில் வரவேண்டாம் என்று எச்சரிக்கப்ட்டனர். மைசூரு பேங்க் சர்க்கிளில் கன்னட ஆர்பாட்டக்காரர்கள் மனிதச் சங்கிலி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு சாலையை முற்றிலும் வழி மறித்தனர். எலஹங்கா புதிய டவுனில் தமிழ்நாடு பதிவு எண்கள் கொண்ட லாரிகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

பி.இ.எச். கல்லூரி சுங்கச் சாவடி அருகே தமிழ்நாட்டு லாரி ஒன்றுக்கு தீவைக்கப்பட்டது. மகதி சாலையிலும் லாரி ஒன்றிற்கு தீவைக்கப்பட்டது. சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்த பவன் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வளாகம் சூறையாடப்பட்டு சேதமடைந்துள்ளது.

வட்டால் நாகராஜ் மற்றும் பிற கன்னட ஆர்பாட்டக்காரர்கள் விதான் சவுதா அருகே கைது செய்யப்பட்டனர். முன்னதாக இவர்கள் முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து தமிழகத்தில் உள்ள கன்னடக்காரர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதே வேளையில் தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் சித்தராமையாவிடம் நகரத்தில் உள்ள 25 லட்சம் தமிழர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தினர்.

வன்முறையையடுத்து "நம்ம மெட்ரோ" சேவைகள் முடக்கப்பட்டன. பெங்களூருவில் மட்டும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சுமார் 18,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தின் சில பகுதிகளில் கன்னடியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டு கர்னாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது குறித்து கடிதம் எழுதப்போவதாக தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]