காவிரி ’மேற்பார்வை குழு’ அமைக்க இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 12, 2013

காவிரி இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்த "மேலாண்மை வாரியம்" அமைக்க இந்திய அரசுக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. இந்த மனுவின் மீதான இரண்டாம் கட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. உச்சநீதிமன்றம், 2007ல் வெளியான இறுதி தீர்ப்புக்கு மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடுவதற்கு பதிலாக கர்நாடக வழக்குரைஞர் பாலி நாரிமன் வாதத்தை ஏற்று மேற்பார்வைக்குழுவை அமைக்க ஆணையிட்டுள்ளது.


அதன் படி காவிரி மேற்பார்வைக் குழு மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையில் அமைக்கப்படும். இதில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களின் தலைமை செயலர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி, காவிரி நீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்று ஆலோசித்து முடிவு எடுப்பது இவர்களது கடமையாகும். இதில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் இவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து தமிழக உழவர் முன்னணியின் சார்பில் அதன் கடலூர் மாவட்ட செயலாளார் சி.ஆறுமுகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.


அண்மையில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை கூறி மேலாண்மை வாரியம் அமைப்பதை இந்திய அரசு தவிர்த்தது. உச்ச நீதிமன்றம் இப்போதைய தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு எதையும் இந்திய அரசுக்கு விதிக்கவில்லை. மொத்தத்தில் எந்த தீர்ப்பு கிடைத்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் இல்லை என்ற நிலைப்பாட்டில் இந்திய அரசு தெளிவாக உள்ளது. உச்ச நீதிமன்றமும் கர்நாடகத்தின் கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் மன்றமாகவே உள்ளது.


ஆகவே, தமிழக அரசு அனைத்து கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தை கூட்டி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு சி. ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.


மூலம்[தொகு]