காஷ்மீரில் தொடருந்துப் பாதை தீவிரவாதிகளால் தகர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 3, 2010


இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் புல்வாமா மாவட்டத்தில் தொடருந்துப் பாதையொன்றை தீவிரவாதிகள் குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர். இதனை அடுத்து காஷ்மீரின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிய தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர் இப்பகுதியில் போராளிகள் இராணுவத்தினருடன் நடத்திய சண்டையில் 14 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


"இக்குண்டுத் தாக்குதலில் எவரும் கொல்லப்படவில்லை. தொடருந்துக்கள் எதுவும் அந்நேரத்தில் சேவையில் ஈடுபட்டிருக்கவில்லை," என உள்ளூர் காவல்துறை அதிகாரி ஐஜாஸ் அகமது கூறினார். ஆனாலும் உள்ளூர் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.


வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10:00 மணிக்கு கண்ணிவெடி ஒன்றைத் தீவிரவாதிகள் வெடிக்கவைத்தனர். இரண்டு அடி நீள தண்டவாளம் இதனால் பாதிப்படைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் தொடருந்துப் பாதை சீர் செய்யப்பட்டிருந்தது எனக் காவல்துறை அதிகாரி கூறினார்.


வெள்ளிக்கிழமை காலை அளவில் பாதை திருத்தப்பட்டு வழமையான சேவைகள் இயங்க ஆரம்பித்தன.


அண்மைக் காலங்களில் காஷ்மீர் பகுதியில் வன்முறைகள் பெருமளவு குறைந்துள்ளது. ஆனாலும் போராளிகள் மீளக் கூடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்கள் என அஞ்சப்படுகிறது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இந்திய ஆட்சிக்கெதிரான தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடிக்கவென பல்லாயிரக்கணக்கான இந்தியப் படையினர் இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்[தொகு]