உள்ளடக்கத்துக்குச் செல்

கிறித்துமசுத் தீவுக்கருகில் அகதிகள் படகு 55 பேருடன் மூழ்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 9, 2013

இந்தியப் பெருங்கடலில் கிறித்துமசுத் தீவில் இருந்து 120 கிமீ தொலைவில் 55 பேருடன் சென்ற படகு ஒன்று சென்ற வெள்ளியன்று மூழ்கியதை அடுத்து 13 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இப்படகு புதன்கிழமை அன்று கிறித்துமசுத் தீவை நோக்கி வருவது அவதானிக்கப்பட்டதாக ஆத்திரேலியக் கடற்படையினர் கூறியுள்ளனர். அப்படகில் ஏறத்தாழ 55 பேர் இருந்ததாக ஆத்திரேலிய வான்படை விமானம் ஒன்றில் இருந்து கணிக்கப்பட்டது. ஆனாலும், படகில் இருந்து உதவி எதுவும் கேட்கப்படவில்லை என அவர்கள் கூறினர். படகில் குழந்தைகளும், பெண்களும் சிலர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


வெள்ளிக்கிழமை அன்று இறந்த உடல் ஒன்று அப்பகுதியில் மிதந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மேலும் பல உடல்கள் சனிக்கிழமை அன்று மீட்கப்பட்டன. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் 15 கப்பல்களும் 10 உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


படகில் இருந்தவர்கள் எந்த நாட்டினர் என்று தெரிவிக்கப்படவில்லை எனினும், பொதுவாக ஆப்கானித்தான், ஈராக், ஈரான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்தோர் இந்தோனேசியாவூடாக ஆத்திரேலியக் கடற்பரப்பினுள் நுழைகின்றனர்.


இதேவேளையில், சனிக்கிழமை அன்று மேலும் ஒரு படகில் இருந்து உதவி கோரப்பட்டதாகவும், ஆனாலும், அப்படகைத் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் ஆத்திரேலிய உட்துறை அமைச்சர் ஜேசன் கிளேர் கூறியுள்ளார்.


இன்று மாலை கொக்கோசுத் தீவின் மேற்கே 500 கடல் மைல் தொலைவில் 78 அகதிகளுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சரக்குக் கப்பல் ஒன்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இப்படகை மீட்டுள்ளது. வேறொரு படகு ஒன்று 130 பேருடன் நேற்று சனிக்கிழமை அன்று கிறித்துமசுத் தீவின் வட-மேற்கே மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கிறித்துமசுத் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு படகு வெள்ளிக்கிழமை அன்று 69 பேருடன் கிறித்துமசுத் தீவுக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஆத்திரேலியாவுக்குச் சொந்தமான கிறித்துமசுத் தீவு ஆத்திரேலியாவில் இருந்து சுமார் 1,600 மைல் தூரத்திலும், இந்தோனேசியக் கரையில் இருந்து 300 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது.


மூலம்

[தொகு]