கிறித்துமசுத் தீவுக்கருகில் மேலும் ஒரு படகு மூழ்கியது, 125 பேர் காப்பாற்றப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 27, 2012

கிறித்துமசு தீவின் வடக்கே அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகொன்று கடலில் மூழ்கியதை அடுத்து, படகில் இருந்த 125 பேர் வரையில் காப்பாற்றப்பட்டுள்ளனர் என ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார். இப்பிராந்தியத்தில் ஒரு வாரத்துக்குள் இரண்டாவது படகு இவ்வாறு மூழ்கியுள்ளது.


இன்று புதன்கிழமை காலையில் இப்படகு கடலில் தத்தளிப்பதைக் கண்ணுற்ற ஆத்திரேலிய எல்லைக்காவல் படையினர் விரைந்து சென்று 123 பேரைக் காப்பாற்றினர். இப்படகில் 133 பேர் வரையில் பயணித்ததாக ஆத்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 123 பேர் காப்பாற்றப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம் இப்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 110 பேர் வரையில் காப்பாற்றப்பட்டனர். 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 200 பேர் வரையில் இப்படகில் பயணித்ததாக நம்ப்பப்படுகிறது. இப்படகு இலங்கையில் இருந்து புறப்பட்டதாக முன்னர் கூறப்பட்டிருந்தாலும், இப்படகில் இருந்தவர்கள் அனைவரும் ஆப்கானியர்கள் என ஆத்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.


கிறித்துமசுத் தீவு ஆத்திரேலியாவின் வடமேற்குக் கரையில் அமைந்துள்ளது. ஆத்திரேலியாவின் ஆளுகைக்கு உட்பட்ட இத்தீவை நோக்கியே பல அகதிகள் படகுகள் மூலம் இந்தோனேசியாவூடாக ஆத்திரேலியப் பெரும்பரப்பில் குடியேறும் முயற்சியில் வருகின்றனர். இங்கு வரும் அகதிகள் தற்காலிகமாக இத்தீவிலேயே தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர் இவர்கள் தொகுதி தொகுதியாக ஆத்திரேலியப் பெரும்பரப்புக்குள் கொண்டுவரப்படுகின்றனர்.


2010 ஆம் ஆண்டு டிசம்பரில் இவ்வாறான விபத்து ஒன்றில் 50 பேர் வரையில் உயிரிழந்தனர், இறந்தவர்களில் பலர் இலங்கையர் ஆவர்.


மூலம்[தொகு]