கிழக்கு உக்ரைனில் இரண்டு இராணுவத் தளங்களை உருசிய-ஆதரவுப் படையினர் கைப்பற்றினர்
- 20 சூலை 2014: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 18 சூலை 2014: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
- 4 சூன் 2014: கிழக்கு உக்ரைனில் இரண்டு இராணுவத் தளங்களை உருசிய-ஆதரவுப் படையினர் கைப்பற்றினர்
- 24 மார்ச்சு 2014: கிரிமியாவில் இருந்து தமது படையினரை வெளியேறுமாறு உக்ரைன் உத்தரவு
- 22 மார்ச்சு 2014: கிரிமியக் குடியரசு உருசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது
புதன், சூன் 4, 2014
உக்ரைனின் கிழக்கே உருசிய ஆதரவுப் படையினர் கைப்பற்றியுள்ள சிலோவியான்ஸ்க் நகருக்கு அருகாமையில் லுகான்ஸ்க் நகரில் உள்ள இரண்டு உக்ரைனிய இராணுவத் தளங்களை உருசிய-ஆதரவுப் படையினர் கைப்பற்றினர்.
நேற்று செவ்வாய்க்கிழமை அன்று உருசிய-ஆதரவுப் படையினர் இந்த இரு தளங்கள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர். கடந்த திங்களன்று லுகான்ஸ்க் நகரின் மீது இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனியப் படையினர் கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்து விட்டதாகவும், ஆனாலும் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தனியெத்ஸ்க் பிராந்தியத்தில் சிலோவியான்ஸ்க் நகரை மீளக் கைப்பற்றும் முயற்சியில் உக்ரைனியப் படையினர் முயன்று வருகின்றனர்.
கடந்த மாதம் தோனெத்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பிரதேசங்களில் மக்கள் வாக்கெடுப்பு நடத்திய உருசிய-ஆதரவுப் படையினர், வாக்கெடுப்பு முடிவுகளின் படி அப்பிரதேசங்களை விடுதலை பெற்ற பிரதேசங்களாக அறிவித்தனர். இவ்வாக்கெடுப்பு சட்ட விரோதமானது என உக்ரைனிய அரசு கூறியுள்ளது.
கடந்த பெப்ரவரியில் உக்ரைனின் மாஸ்கோ-ஆதரவு அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதை அடுத்து அங்கு அரசியல் கொந்தளிப்பு நிலை இருந்து வந்தது. யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, உக்ரைனின் கிளழக்கே உருசியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரிமியா விடுதலையை அறிவித்து, உருசியாவுடன் இணைந்து கொண்டது. இதனை உருசியா தவிர வேறு எந்த நாடுகளும் அங்கீகரிக்கவில்லை.
தென்கிழக்கு உக்ரைனில் போரிடு கிளர்ச்சியாளர்களுக்கு தாம் எவ்வித இராணுவ உதவியும் வழங்கவில்லை என உருசிய அரசுத்தலைவர் பூட்டின் பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மூலம்
[தொகு]- Ukraine crisis: Rebels take bases in Luhansk region, பிபிசி, சூன் 4, 2014
- Ukrainian troops abandon outpost after fierce battle, வாசிங்டன் போஸ்ட், சூன் 4, 2014