குர்தியப் போராளிகளின் தாக்குதலில் 26 துருக்கியப் படையினர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 19, 2011

துருக்கியின் தென்கிழக்கே குர்தியப் போராளிகளுடன் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 26 துருக்கியப் படையினர் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.


குர்திய மாகாணமான ஹக்காரியில் இடம்பெற்ற இத்தாக்குதல், கடந்த பல ஆண்டுகளக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் துருக்கியப் படையினருக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு எனக் கூறப்படுகிறது. தென்கிழக்கு பிட்லிசு மாகாணத்தில் ஐந்து காவல்துறையினர் கொல்லப்பட்டு அடுத்த நாள் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


தாக்குதல்களை அடுத்துப் போராளிகள் நிலைகொண்டுள்ள வடக்கு ஈராக்கினுள் தமது படையினர் நுழைந்துள்ளதாக அரசு கூறியுள்ளது. "இத்தாக்குதலுக்கு நாம் முறையான பதிலடி கொடுப்போம்," என அரசுத்தலைவர் அப்துல்லா குல் தெரிவித்தார்.


குர்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் தென் கிழக்குப் பகுதியில் அதிக சுயாட்சி வழங்கக் கோரி குர்தியப் போராளிகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். 1984 ஆம் ஆண்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.


மூலம்[தொகு]