உள்ளடக்கத்துக்குச் செல்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு, ஆறு பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 27, 2013

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்திற்கு அருகில் குண்டு ஒன்று வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், மேலும் மூவர் காயமடைந்தனர்.


இடிந்தகரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் குண்டு ஒன்று தற்செயலாக வெடித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இக்குண்டுவெடிப்புக்கும் அணுமின் நிலையத்துக்கு எதிராக அண்மைக்காலங்களில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இவ்வீட்டில் சட்டவிரோதமாகக் குண்டுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இக்குண்டுவெடிப்பில் மூன்று வீடுகள் சேதமடைந்தன.


இந்திய-உருசியக் கூட்டில் அமைக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம் அக்டோபரில் இயங்க ஆரம்பித்தது. 2011 இல் யப்பானில் இடம்பெற்ற சுனாமியில் புக்குசிமா அணுமின் நிலையம் பாதிப்புக்குள்ளானதால், இவ்வாறான விபத்துகள் கூடங்குளத்திலும் இடம்பெறலாம் என்பதே எதிர்ப்பாளர்களின் கருத்தாகும். இப்பகுதி 2004 ஆம் ஆண்டு சுனாமியில் பெரும் பாதிப்புக்குள்ளானது.


குண்டுவெடிப்பினால் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இந்திய அணுவாற்றல் ஆணையத்தின் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.


மூலம்

[தொகு]