கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 2, 2015

கென்யாவில் உள்ள காரிசா பல்கலைக்கழகத்தில் சோமாலியாவின் அல் சபாப் தீவிரவாத குழுவினர் நடைத்திய தாக்குதலில் குறைந்தது 70 பேர் பலியானதாகவும், குறைந்தது 79 பேர் காயமடைந்ததாகவும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டனர் எனவும் சுமார் 300 பேர் குறித்த தகவல் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் இறந்தவர் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கும் என அஞ்சப்படுகிறது. இறந்தவர் எண்ணிக்கை 147 என்று சிலர் கூறுகிறார்கள்.


தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் கொல்லப்பட்டதாகம் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கை தொடர்வதாகவும் கென்யாவின் உள்துறை அமைச்சர் யோசப் தெரிவித்தார். இத்தாக்குதலை ஒட்டி நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கென்ய சோமாலியா எல்லையில் உள்ள நான்கு கவுண்டிகளான வசிர், காரிசா, தானா ஆறு, மன்டேரா ஆகியவற்றிற்கு மாலையில் இருந்து விடியும் வரை ஊரடங்கு உத்தரவு 2 வாரங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கென்ய படைகளின் கட்டுப்பாட்டில் சில கட்டடங்கள் வந்தாலும் இன்னும் சண்டை நீடிக்கிறது என கென்யாவின் ரெட் கிராசு அதிகாரி கூறினார்.


காரிசா பல்கலைக்கழகம் சோமாலியா எல்லையில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. இத்தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என்று அல் சபாப் பிபிசிக்கு தெரிவித்தது. இத்தாக்குதலுக்கு காரணமானவர் முகமது குனோ என்ற அல் சபாபின் உயர்பொறுப்பில் உள்ளவர் என கென்ய அரசு அறிவித்துள்ளது. அவரை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு $220,000 பரிசு அளிப்பதாக கென்யா அரசு அறிவித்துள்ளது.


முகமது குனோ கென்யாவின் காரிசா கவுண்டியிலுள்ள இசுலாமிய பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். 2007இல் அவ்வேலையை விட்டு விலகினார். இவருக்கு துல்யதியன் என்ற பட்டப்பெயராலும் அழைக்கப்படுகிறார் சோமாலிய மொழியில் அதற்கு நீண்ட கைகளை உடையர் என்று பொருள். கமாதரெ என்ற பெயராலும் அறியப்படுகிறார்.


தீவிரவாதிகளின் தாக்குதல் உள்ளூர் நேரம் 5.30 மணிக்கு தொடங்கியது. காரிசா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களில் பெரும்பான்மையோர் முசுலிம் அல்லாதவர்கள். தீவிரவாதிகள் பல கிறுத்துவர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.


மாணவர் மன்றத்தின் துணை அவைத்தலைவர் கோலின்சு வெடன்குலா ஆயுததாரிகள் மாணவர் தங்கும் அறைக்கு வந்து மறைந்துள்ள மாணவர்கள் எம்மதம் என்று கேட்டு முசுலிம் அல்லாதவர்களை சுட்டுக்கொன்றனர் என்றார். மாணவர் கிறுத்துவர் என்றால் மாணவரை அங்கேயே சுட்டனர் என்றார்.


மூலம்[தொகு]