உள்ளடக்கத்துக்குச் செல்

நைரோபி வணிக வளாகத் தாக்குதல், 69 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 23, 2013

கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேற் வணிக வளாகத்தில் இசுலாமியத் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை நடத்திய திடீர்த் தாக்குதலில் 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். 170 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் இரண்டு இந்தியர்கள் உட்படப் பல வெளிநாட்டவர்களும் அடங்குவர்.


வெஸ்ட்கேட் அங்காடியில் தற்போது 10 முதல் 15 தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த போது சுமார் ஆயிரம் பேர் வரையில் வளாகத்தில் இருந்தனர். அங்கிருந்து இன்று சுமார் 15 நிமிட நேரம் தொடர் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சோமாலியாவின் அல்-சபாப் போராளிகள் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளார்கள்.


இன்று காலை இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக கென்ய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்க மற்றும் இசுரேலிய உதவியும் இராணுவத்தினருக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்த் தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் காயமடைந்தனர். பொதுமக்கள் சிலர் பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.


கென்ய அரசுத்தலைவர் உகுரு கென்யாட்டா பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், "குற்றவாளிகள் தற்போது கட்டடத்தின் ஓரு குறிப்பிட்ட இடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளனர். மிக விரைவில் நாம் அவர்களைப் பிடித்து விடுவோம்," எனத் தெரிவித்தார். தனது மருமகனும் இத்தாக்குதலில் இறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


மூன்று பிரித்தானிய நபர்கள், இரண்டு இந்தியர்கள், கனடிய தூதரக அதிகாரி ஒருவர், இரண்டு பிரெஞ்சு நாட்டினர், கானாவைச் சேர்ந்த பிரபல கவிஞர் கோபி அவூனூர் ஆகியோரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். இவர்களை விட டச்சு, தென்னாப்பிரிக்கர்கள், ஆத்திரேலிய-பிரித்தானியரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். வணிக வளாகத்தில் அமைந்துள்ள பல நிறுவனங்கள் இசுரேலியர்களுக்குச் சொந்தமானதாகும்.


சோமாலியாவின் தெற்குப் பகுதியில் சுமார் 4,000 கென்யப் படையினர் நிலை கொண்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு முதல் அவர்கள் அங்கு அல்-சபாப் தீவிரவாதிகளுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அல்-கைதாவுடன் தொடர்புள்ள அல்-சபாப் தீவிரவாதிகள் கென்யப் படைகள் சோமாலியாவில் இருந்து வெளியேறும் வரை கென்யாவில் தாம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர்.


மூலம்[தொகு]

[பகுப்பு:தீவிரவாதம்]]