கேரளம், அசாம் மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 14, 2011

இந்தியாவில் கேரளம் மற்றும் அசாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.


கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆளும் இடதுசாரி முன்னணி (எல்டிஎப்) தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் கூட்டணி 4 இடங்கள் மட்டும் அதிகமாகப் பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 140 நாற்பது இடங்கள் கொண்ட கேரள சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய சனநாயகக் கூட்டணி 72 இடங்களையும், மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி சனநாயக் கூட்டணி 68 இடங்களையும் வென்றுள்ளன.


மார்க்சியக் கம்யூனிஸ்ட் 45 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தனித்து 38 இடங்களிலும், அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் 20 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (எம்) 9 இடங்களிலும், சோசலிஸ்ட் ஜனதா (சனநாயகம்) கட்சி 2 இடத்திலும், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), கேரள காங்கிரஸ் (பி), ஆர்எஸ்பி (பி) ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.


இடதுசாரி முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் 13 இடத்திலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடத்திலும், தேசியவாத காங்கிரஸ், ஆர்எஸ்பி ஆகிய கட்சிகள் தலா 2 இடத்திலும் வெற்றி பெற்றன. இடதுசாரி ஆதரவில் போட்டியிட்ட 2 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.


அசாம் மாநிலத்தில் தருண் கோகாய் தலைமையில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி 76 தொகுதிகளில் வென்றுள்ளது. அசாம் கணபரிக்சத் 10 தொகுதிகளில் வென்றது. அசாமில் 2001-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.


மூலம்[தொகு]