கை கழுவி தமிழகம் கின்னஸ் சாதனை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 9, 2010


சுகாதாரமாக கைகள் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைக்கிணங்க ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் நாள் “உலக கை கழுவும் நாளாக” கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, லைப்பாய் சோப் நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து 15,115 மாணவர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து ஒரே சமயத்தில் கைகளைக் கழுவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகடிநச்சியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.


மேலை நாடுகளில் சிறு கரண்டி மற்றும் முள் கரண்டிகளை உணவு உண்ண பயன்படுத்துகிறார்கள். இதனால் அங்கு கைகள் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் 90 சதவிகிதம் மக்கள் உணவு உண்பதற்கு அதிகமாக கைகளையே பயன்படுத்துகிறார்கள். கைகள் சுத்தமாக இல்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்று நோய், மற்றும் சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையில் இருந்து வந்த பின்னரும் சோப்பு போட்டு கை கழுவுதல் மிக அவசியம், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவிகிதம் தடுக்க முடியும். உலகத்தில் 15 இலட்சம் குழந்தைகள் வயிற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கை சுத்தம் மற்றும் தன் சுத்தம் இல்லாமையே ஆகும். இதனால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பை குறைக்க முடியும்.


இதன் அடிப்படையில் பல துறைகளை இணைத்து தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையால் 15.10.2009-இல் நடத்தப்பட்ட “கை கழுவும் நிகழ்வு” உலக சாதனை பெற்று கின்னஸ் ரெக்கார்டில் பதிவாகி உள்ளது.


வி.கு. சுப்புராஜ், அரசு முதன்மைச் செயலாளர்.

மூலம்[தொகு]