உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கோ எம்23 போராளிகளின் தளங்கள் மீது ஐநா படையினர் எறிகணைத் தாக்குதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 24, 2013

கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் நிலை கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் படையினர் அங்கு ஆயுதப் போரில் ஈடுபட்டு வரும் எம்23 போராளிகளின் கோமா நகரத் தளங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.


கடந்த வியாழன் அன்று கோமா நகர் மீது போராளிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதலை தாம் நடத்தியதாக ஐநா பேச்சாளர் தெரிவித்தார். போராளிகளின் தாக்குதலில் ஒரு பெண், மற்றும் சிறுவர்கள் உட்பட ஐந்து பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த எறிகணைத் தாக்குதல் ருவாண்டாவின் பகுதியில் இருந்தே வந்ததாக கொங்கோ தகவல்துறை அமைச்சர் லாம்பர்ட் மெண்டே தெரிவித்துள்ளார். ருவாண்டாவின் எல்லையில் கோமா நகரம் அமைந்துள்ளது.


கோமா நகர் மீது தாக்குதல் தாங்கள் தாக்குதல் தடத்தவில்லை எனத் தெரிவித்துள்ள எம்23 போராளிகள், தாக்குதல்களுக்கு இராணுவத்தினர் மீது குற்றம் சாட்டினர்.


போராளிகளின் ஆயுதங்களைக் களைந்து அவர்களைக் கலைப்பதே ஐக்கிய நாடுகளின் படையின் நோக்கமாகும். ஏற்கனவே அங்கு நிலைகொண்டுள்ள 18,000 ஐநா அமைதிப் படையினருக்கு ஆதரவாக மேலும் 3,000 பேர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


கடந்த ஆண்டு நவம்பரில் எம்23 போராளிகள் கோமா நகரைக் கைப்பற்றி சிறிது காலம் அந்நகரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனாலும், பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து ஒரு வார காலத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.


எம்23 போராளிகளுக்குத் தாம் உதவியளிப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுகளை ருவாண்டா மறுத்து வருகிறது. ருவாண்டா அரசும், எம்23 போராளிகளைப் போன்றே துட்சி இனத்தவர் ஆவர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இராணுவத்தில் இருந்து எம்23 என்ற கிளர்ச்சிக் குழுவினர் வெளியேறி இராணுவத்தினருக்கு எதிராகப் போர் தொடுத்ததை அடுத்து, நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து 800,000 பேர் வரை இடம்பெயர்ந்தனர்.


இவ்வாண்டு உகாண்டாவில் இடம்பெறவிருந்த அமைதிப் பேச்சுக்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


மூலம்

[தொகு]