உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கோ எம்23 போராளிகள் ஆயுதங்களைக் களைவதாக அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 6, 2013

கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்குப் பகுதியில் ஆயுதப் போரை நடத்தி வந்த எம்23 போராளிக்குழு தாம் ஆயுதங்களைக் களைவதாக அறிவித்துள்ளது. அரசுப்படைகள் தாம் இராணுவ வெற்றி பெற்றதாக அறிவித்த சில மணி நேரத்தில் போராளிகளின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.


தமது நோக்கத்தை நிறைவேற்றத் தாம் அரசியல் வழிகளைக் கையாளத் தீர்மானித்துள்ளதாக எம்23 போராளிக்குழுவின் தலைவர் பேர்ட்ரண்டு பிசிமுவா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது போராளிகள் அனைவரையும் ஆயுதங்களைக் களைய ஆணையிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


கடைசிப் போராளிகள் சரணடைந்துள்ளதாகவும், மேலும் சிலர் நாட்டில் இருந்து தப்பி வெளியேறிவிட்டதாகவும் அரசு அறிவித்துள்ளது. இதுவரை ஆயுதங்களைக் களையாத ஏனைய போராளிக் குழுக்களை போரைக் கைவிடுமாறு தாம் கேட்கவிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.


2012 ஆம் ஆண்டில் எம்23 போராளிகள் ஆயுதப்போரில் ஈடுபட ஆரம்பித்ததில் இருந்து சுமார் 800,000 பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.


தென்னாப்பிரிக்கத் தலைநகர் பிரித்தோரியாவில் கடந்த திங்களன்று இடம்பெற்ற ஆப்பிரிக்கத் தலவர்களின் மாநாட்டை அடுத்து கொங்கோ பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாந்திரே லூபா உந்தாம்போ செய்தியாளர்களிடம் கூறுகையில், போராளிகள் தாம் ஆயுதங்களைக் கைவிடுவதாக பொது அறிவிப்பு வெளியான பின்னர் ஐந்து நாட்களின் பின்னர் முறையான அமைதி உடன்படிக்கை கையெழுத்திடப்படும் என்றார்.


உருவாண்டா, உகாண்டா ஆகிய நாடுகள் எம்23 போராளிகளுக்கு உதவி செய்வதாக கொங்கோ குற்றம் சாட்டி வந்தாலும், அதனை அந்நாடுகள் மறுத்து வந்திருந்தன. உருவாண்டா அரசும், எம்23 போராளிகளைப் போன்றே துட்சி இனத்தவர் ஆவர்.


கனிம-வளங்கள் நிறைந்த கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்குப் பகுதி 1994 ஆம் ஆண்டு முதல் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ருவாண்டா இனப்படுகொலையில் இருந்து தப்பி மில்லியன் துத்சி இனத்தவர்கள் எல்லை தாண்டி கொங்கோ வந்தனர். ஹூட்டு போராளிகள் கொங்கோவில் ஒளிந்திருக்கிறார்கள் எனக் காரணம் காட்டி இரண்டு தடவைகள் ருவாண்டா கொங்கோ மக்களாட்சிக் குடியரசு மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 1997-2003 காலப்பகுதியில் உகாண்டாவும் தமது இராணுவத்தினரை கொங்கோவுக்கு அனுப்பியது.


மூலம்

[தொகு]

|